வானூர்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். விழுப்புரத்தில் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் வந்தார். 2ம் நாளான நேற்று மாலை வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார். பேருந்து நிலையம் அருகே பிரசார வாகனத்தில் நின்றபடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். விவசாயிகளை காக்கும் அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமைத் தொகை கொடுக்கப்படும்.
எனக்கு கல்வி என்றால் மிகவும் பிடிக்கும். கல்வி என்பது எனது உயிர்மூச்சு. அதிகளவு கல்லூரி, பல்கலைக்கழகம் துவங்கியது அதிமுக ஆட்சியில் தான். இந்தியாவிலே அதிமுக தான் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தது. 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். இதனால் 2,800 மாணவர்கள், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளை படித்துள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதி குறையாது என மத்திய அமைச்சர் கூறிவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார். எடப்பாடி பேசுகையில், வானூர் தொகுதியில் அதிமுக சார்பில் நின்றாலும், கூட்டணியில் நின்றாலும் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். இனால், அவருக்கு அருகில் நின்றிருந்த சிட்டிங் அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.