சென்னை: கல்விதான் அனைத்துக்கும் அடிப்படையான விஷயம் என்பதை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் நடத்தப்பட்ட ‘என் பள்ளி என் பெருமை’ என்ற தலைப்பில் கலைப்போட்டிகள் நடைபெற்றன. அதில், வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றுகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று 70 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றுகள், விருதுகளை வழங்கினர்.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசரை போற்றும் வகையில் கலைஞரால் கல்வி வளர்ச்சி நாள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் ஏராளம். அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும், அதே நேரத்தில் மாணவர்கள் தங்கள் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்றவர்களில் பலர் தங்கள் காணொலிகளை வெளியிட்டுள்ளனர். அதில், ஈரோடு பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பள்ளிச்சீருடை அணிந்து தினமும் பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருவதை காண முடிந்தது. இந்த அர்ப்பணிப்புதான் கல்வி வளர்ச்சிக்கு பலம்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர், இந்த ஆட்சியின் கல்விக்கான திட்டங்கள் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை கொடுத்துள்ளது என்பதை பகிர்ந்து கொண்டனர். இது இந்த அரசுக்கான விளம்பர நிகழ்வல்ல. கல்வியால் சாதிக்க முடியும் என்பதை அடுத்த தலைமுறைக்கான விழிப்புணர்வாக இருக்கிறது. சமூக வலைதளங்கள் பொழுது ேபாக்குக்கான இடம் மட்டுமே. படிக்காமல் ரீல்ஸ் போட்டு சம்பாதிக்கலாம் என்று எண்ண வேண்டாம். ஆனால், கல்வியே அனைத்துக்குமான அடிப்படை விஷயம் என்பதை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது. பொய் செய்திகளை பரப்பவும் சமூக வலைதளங்களை சிலர் பயன்படுத்துகின்றனர். அதை முறியடிக்கும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.