கோவை: தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தராத ஒன்றிய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு கார் மூலம் நேற்று சென்றார்.
இந்நிலையில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியை தராததை கண்டித்து, ஈச்சனாரி அருகே புறவழிச்சாலை பகுதியில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பதாதைகளை ஏந்தியபடி கண்டன கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் கூறுகையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7,600 தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு ரூ.773 கோடி தமிழ்நாட்டிற்கு தர வேண்டியுள்ளது. புதிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என ஒன்றிய அரசு கடந்த 4 ஆண்டுகளாக கல்வி நிதியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
இதன்காரணமாக, இச்சட்டத்தின்கீழ் இந்தாண்டு 1.5 லட்சம் ஏழை குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் உள்ளனர். ஏற்கனவே இத்திட்டத்தின்கீழ் படித்து வந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளுக்கு துரோகம் செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளின் நலன் கருதி கல்விக்கான பணத்தை ஒன்றிய கல்வி அமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார்.