Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் காமராஜர் பற்றிய வீண் விவாதங்களை தவிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். பெருந்தலைவர் காமராஜர் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களை தவிர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரை ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் பெரியார்.

குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் அண்ணா. பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளை செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!

அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பை காக்கும் வகையில்தான் எந்த கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களை தவிர்ப்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.