தமிழகத்துக்கு ரூ.2291 கோடி கல்வி நிதி நிலுவை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: மூன்று வாரத்தில் பதிலளிக்க கெடு
புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில், பிஎம் ஸ்ரீ பள்ளி எனப்படும் மாதிரி பள்ளிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இது இந்தியை திணிப்பதாகக் கூறி, அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது. இதற்கிடையே, சமக்ர சிக் ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய, ரூ.2,152 கோடியை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது. ஆனால் பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே, இந்த கல்வி நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த தகவலானது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கேரளா, மேற்குவங்க மாநிலங்களுக்கும், சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற சூழலில் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியான ரூ.2,291 கோடியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் ஒரிஜினல் சூட் மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேற்கண்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்துருகர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன்,‘‘கடந்த 2001ம் ஆண்டிலிருந்து கல்வி நிதியை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வராமல் தராமல் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் சுமார் 43 லட்சம் மாணவர்களும், 2 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களும், சுமார் 32,000 கல்வித்துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் ரூ.2151 கோடி தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை உடனடியாக உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என்று நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
