Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்த எடப்பாடிக்கு காங்கிரஸ் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அளித்த பேட்டி:

சோனியாகாந்தியின் வழகாட்டுதலின் கீழ் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது 2005ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டம்(ஆர்.டி.ஐ.) இயற்றப்பட்டது. ஆர்.டி.ஐ. சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. ஆனால் ஆர்டிஐ சட்டத்தை நீர்த்துப் போக செய்கிற வேலையை பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறது. 11 ஆணையர்களை நீக்கி இருக்கிறார்கள். ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி யார் தகவல் கேட்டாலும் சரியாக பதில் கொடுப்பதில்லை என்ற புகார் எழும்பி வருகிறது. சாதாரண குடிமக்கள் கடிதம் எழுதி தகவல் கேட்டால் இந்த அரசு கொடுக்க வேண்டும். ஆனால், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தற்போது சுமார் 4 லட்சத்து 5 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இன்னும் போகப் போக மக்கள் கேட்கும் தகவல்களை கொடுக்கவில்லை என்றால் மக்கள் இந்த ஆட்சியை மாற்றுவார்கள். திமுக கூட்டணியில் எவ்வளவு இடங்கள் கேட்க வேண்டும் என்பதை நாங்கள் எங்கள் அகில இந்திய தலைமைக்கு வலியுறுத்துவோம்.

திமுக கூட்டணியை விட்டுக் கொடுக்காமல் இருந்தாலும், மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு என மக்கள் பிரச்சினை என்று வரும்போது நாங்கள் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம். எடப்பாடி பழனிசாமி நாளிதழ்களை படிப்பதில்லை. அரசியலும் தெரிவதில்லை. வாயில் வந்தபடி பேசிவிட்டு செல்கிறார். அவரைப் போன்று கொச்சைப்படுத்தி பேச எங்களுக்கு தெரியாது. தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு அடிமைத்தனமாக இருப்பவர்கள் எங்களை பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. எடப்பாடி போன்று 3ம் தர அரசியலை முதல்முறையாக பார்க்கிறோம். ஆரவாரம் இல்லாமல், மக்களுக்கு பிரச்னை இல்லாமல், உயிர் பலி இல்லாமல் கடந்த ஜனவரி மாதம் முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டோம், என்றார். பேட்டியின் போது காங்கிரஸ் துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கே.விஜயன், ராம் மோகன், எஸ்.ஏ.வாசு, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், லெனின் பிரசாத், எம்.ஏ.முத்தழகன், டி.என்.அசோகன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.