Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடியுடன் மோதலால் பாஜவுக்கு தாவ முயற்சியா? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

கோபி: எடப்பாடியுடன் மோதல் காரணமாக பாஜவுக்கு தாவ உள்ளதாக வெளியான தகவல் குறித்து செங்கோட்டையன் பரபரப்பு பேட்டியளித்து உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதவாது: 1972ல் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் இந்த இயக்கத்தில் தொடர்ந்து பயணித்து வருகின்றேன். ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரை 45 ஆண்டு காலம் எனது நேர்வழி பயணம், எந்த இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு சிறு குற்றம் கூட சொல்ல முடியாத அளவிற்கு எனது வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

நேற்று பத்திரிக்கையில் வந்துள்ள செய்தியை பார்த்தபோது எனக்கு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது.

இதுபோன்ற தவறான செய்தி களை வெளியிடுவதற்கு முன்னாள் கருத்துகளை கேட்டு இருக்க வேண்டும். கோடானு கோடி தொண்டர்களின் இதயத்துடிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இயக்கத்திற்கு நான் தூணாக நின்று பணியாற்றி வருகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு விவகாரங்களில் எடப்பாடியுடன் செங்கோட்டையனுக்கு மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, திருப்பூர், ஈரோடு மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்கள் குறித்து செங்கோட்டையனுடன் ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது, திருப்பூர் மக்களவை தொகுதிக்கு பொறுப்பாளராக வேலுமணியையும், அந்தியூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக செங்கோட்டையனின் அரசியல் எதிரி இ.எம்.ஆர்.ராஜாவையும் நியமித்தது, தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் செங்கோட்டையன் மருத்துவமனையில் அட்மிட்டானது, தனது ஆதரவாளர்களுடன் அந்தியூரில் ஆலோசனை கூட்டம் நடத்தியது என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடியுடன் செங்கோட்டையனுக்கு மோதல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், பாஜவில் சேர செங்கோட்டையன் ரகசிய பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியனாது. பணம் சுருட்டல் உள்ளிட்ட பல புகார்கள் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தமிழக பாஜ கூண்டோடு கலைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் எடப்பாடியுடன் மோதல் தனது சொந்த மாவட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் ஓரம்கட்டப்பட்டுள்ளதாக விரக்தியில் உள்ள செங்கோட்டையன், பாஜவில் மாநில தலைவர் பதவி தந்தால் இணைய சம்மதம் என்று தூது அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. பாஜவுக்கு செல்லவில்லை என்று விளக்கமளித்த செங்கோட்டையன், எடப்பாடியுடனான மோதல் குறித்து வெளியான எந்த தகவல்களையும் மறுக்காததும், விளக்கம் அளிக்காததும் அதிமுக தொண்டர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.