மதுரை: திருப்புவனம் அருகே, கீழடிக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது காரில் ஏறிய செல்லூர் ராஜூவை தடுத்து நிறுத்தி, பின்னால் வரும் வண்டியில வாங்க எனக் கூறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி, கடந்த ஜூலை 30ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கீழடியில் அகழாய்வு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். முன்னதாக மடப்புரத்தில் இருந்து வந்த அவருக்கு கீழடி எல்லையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அதிமுகவினரின் வாழ்த்து கோஷத்தை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி தனது காரை நிறுத்தினார். அவருக்கு செல்லூர் ராஜூ பூங்கொத்து மற்றும் சால்வையை கொடுத்து வரவேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து கூடியிருந்த கட்சியினர் எடப்பாடிக்கு சால்வைகள் ெகாடுத்து வரவேற்றனர்.
அப்போது செல்லூர் ராஜூ, கூட்டத்தை விலக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமியின் காரில் பின்புற கதவை திறந்து உள்ளே சென்று உட்கார முயன்றபோது, முன்சீட்டில் இருந்த எடப்பாடி, பின்னால் திரும்பி கையை காட்டியவாறு வேண்டாம்.... வேண்டாம்..... பின்னால அந்த வண்டில வாங்க... அதுல வாங்க, எனக் கூறி காரில் ஏறவிடாமல் செல்லூர் ராஜூவை தடுத்து நிறுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத செல்லூர் ராஜூ, மனஇறுக்கத்துடன் கூட்டத்திற்குள் இருந்து வௌியில் வருகிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தாலும் டிடிவி தினகரன், சசிகலா, மாஜி முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரைப் பற்றி பெரிதாக விமரிசிப்பதில்லை.
மாவட்டத்தில் இருக்கும் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடியின் பயங்கர ஆதரவாளராக காட்டிக் கொள்வார். ஆனால், செல்லூர் ராஜூவோ எடப்பாடி மீது பட்டும் படாமல்தான் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூட ஒரு நிருபர், மோடி சந்திக்க நேரம் ஒதுக்காததை குறித்துக் கூறி பாவம் ஓபிஎஸ் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செல்லூர் ராஜூ, ‘அவர் முன்னாள் முதல்வர், அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அப்படியெல்லாம் சொல்லக் கூடாது என்று கடிந்து கொண்டார். இதனால், எடப்பாடியும் செல்லூர் ராஜூவை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.