சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அன்னம் தரும் அமுதகரங்கள் நிகழ்ச்சி, திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயனாவரம் ஜோதி நகர், ஜமாலியா அருந்தியர் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அறநிலையத்துறை உண்டியல் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘நான் பேசியது, திரித்து கூறப்படுகிறது’ என மாற்றிப் பேசுகிறார். அவரை எடப்பாடி பழனிசாமி என்று அழைப்பதைவிட பல்டி பழனிசாமி என்று அழைக்கலாம். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகி விட்டதாக நினைக்கும். அதுபோல் அவருக்கு நாட்டு நடப்பே தெரியவில்லை.
காளிகாம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு கட்டவேண்டிய தொகையை கல்வி குழுவில் இருக்கக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை இலவசமாக வழங்கி கொண்டிருக்கிறது. ஏகாம்பரநாதர் கோயிலில் செயல்படுகிற பள்ளி இந்த ஆட்சிக்கு பிறகுதான் பாதுகாக்கப்பட்டது. அங்குள்ள மாணவர்களுக்கு 146 மிதிவண்டி கிடைக்கிறது. இவர் என்ன அரசியல் ஞானியா, எடப்பாடி வாயை கொடுத்து மாட்டிக்கொண்டிருக்கிறார். கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொண்டிருக்கிறார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அவரது கருத்தால் மாணவர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். 2026க்கு பிறகு எடப்பாடி பழனிசாமி என்ற பெயர் நிச்சயமாக மறையும்.
இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மேயர் பிரியா, ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ, சிஎம்டிஏ அதிகாரிகள், மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.