Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடி பழனிசாமியால் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு: அதிமுகவை உடைக்க பாஜ மாஸ்டர் பிளான் பரபரப்பு தகவல்கள்

சென்னை: அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லியில் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் அதிமுகவை உடைக்க பாஜ மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்பு என கடந்த 10 தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம், அதிமுக பல துண்டுகளாக உடைந்து கிடப்பதுதான் என்றும், வரும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், தனித்தனியாக பிரிந்துசென்ற அதிமுக முக்கிய தலைவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடையே எழுந்தது.

குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி இடம்கொடுக்கவில்லை. ஆனாலும், கட்சிக்குள் ஒருங்கிணைப்பு கோரிக்கை எழுந்த வண்ணமே இருந்தது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.வும் இதே கருத்தை முன்வைத்துள்ளது. தங்களது இந்த முயற்சி வெற்றிபெற, அதிமுக மாஜி அமைச்சர் செங்கோட்டையனை பா.ஜ. தலைமை கையில் எடுத்தது.

பா.ஜ.வின் கண் அசைவுக்கு ஏற்ப, இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் பலமுறை நேரில் வலியுறுத்தினார். ஆனால், எடப்பாடி துளியும் அசைந்து கொடுக்கவில்லை. இதனால், கடுப்பாகிப்போன செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என முடிவு செய்தார். இதற்கிடையே, திடீரென டெல்லி சென்ற அவர், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். அதன்பின்னர், கடந்த சில மாதங்களாக நேரடியாக விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, அமைதி காத்து வந்தார். ஆனாலும், அவருக்கு கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிசாமி படிப்படியாக குறைத்து வந்தார்.

இதனால், இருவருக்கும் இடையே நேரடி கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த 5ம்தேதி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பேட்டி அளித்த செங்கோட்டையன், ஒருங்கிணைப்பு குறித்து மீண்டும் பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது, ‘‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும். ஒன்றுபட்டால்தான் வெற்றிபெற முடியும். இந்த இணைப்பு குறித்த பணியை 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதற்கான பணிகளை, ஒத்த கருத்து உள்ளவர்களை கொண்டு தொடங்கப்படும்’’ என்றார்.

இந்த பேட்டிக்கு பிறகு, எடப்பாடி தரப்பு மீண்டும் சூடானது. மறுநாளே செங்கோட்டையன் வகித்து வந்த அதிமுக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி பதவிகளை எடப்பாடி அதிரடியாக பறித்தார். அத்துடன், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் திருப்பூர் முன்னாள் எம்.பி., சத்தியபாமா உள்ளிட்ட 9 பேரின் பதவிகளையும் பறித்து உத்தரவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கை, கட்சிக்குள் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.

இந்த சூழ்நிலையில், கடந்த 3 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டிற்கு சென்று, வாழ்த்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக, பதவி பறிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே செங்கோட்டையனை தொடர்புகொண்டு ஓபிஎஸ் பேசினார். அதேபோன்று சசிகலா, டிடிவி.தினகரன், பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் செங்கோட்டையனின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், செப்டம்பர் 9ம் தேதி டெல்லியில் முக்கிய பா.ஜ., தலைவர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளதாக அவரது நெருங்கிய நண்பர்களிடம் இருந்து தகவல் வெளியானது. கடந்த 2 நாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் மாலை கோபியில் நடந்த பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர், நேற்று அதிகாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், கோவை பீளமேடு விமான நிலையம் வந்தார். இங்கிருந்து காலை 8.50 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

விமான நிலைய வளாகத்தில் அவர், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் ஹரித்வார் போறேனுங்க. ராமர் கோயிலுக்கு போறேன்.. கொஞ்சம் மனசு சரியில்லை.. அதனால, கோயிலுக்கு போய்ட்டு வரலாம்னு சொன்னாங்க. அதனால கோயிலுக்கு போய்க்கிட்டு இருக்கேனுங்க’’ என்றார். ‘‘தமிழகத்தில் அதிக கோயில்கள் உள்ள போது, நீங்கள் ஹரித்வார் போவது ஏன்?’’ என்று கேட்டபோது, ‘‘கடவுள் ராமர்தானே. சாமி கும்பிட்டு நிம்மதியாக இருக்கத்தான். இங்கே இருந்தால் பல்வேறு கமென்ட்ஸ் வெளிவருகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்வாங்க... நாம அமைதியாக கோயிலுக்கு போயிட்டு வரவேண்டியதுதான்... நாளை திரும்பிவிடுவேன்’’ என்றார்.

‘‘டெல்லியில் பா.ஜ. தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதா?’’ என்று கேட்டபோது, ‘‘ஹரித்வார் போகிறேன்... அங்கு ராமரைத்தான் பார்க்க முடியும்’’ என்றார். ‘‘ராமரை சந்திக்கப்போவதாக கூறுகிறீர்கள்?’’ என்றபோது, ‘‘ராமரை அல்ல.. ராமர் கோயிலுக்கு போகிறேன்’’ என்றார்.

‘‘அந்த ராமர் அமித்ஷாவா? மோடியா?’’ என்று கேட்டபோது, ‘‘அந்த ராமர், ராமர்தான். ராமாயணத்தில் இருக்கிற ராமர்’’ என்றார்.

‘‘செப்டம்பர் 9ம்தேதி முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறதே?’’ என்று கேட்டபோது, ‘‘அது மாதிரி ஒன்றும் இல்லை’’ என்றார்.

‘‘நிறைய ஆதரவாளர்கள் உங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறார்களே. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்டபோது, ‘‘எல்லாரும் நான் கலங்கி போய்விடக்கூடாது என்று நினைக்கிறாங்க. நான் சொன்னது நியாயமான கோரிக்கை. ஆகவே, எல்லாரும் வந்து, நீங்க சொன்னது நியாயம்தானுங்க... என்று சொல்லிட்டு, போயிட்டிருக்காங்க’’ என்றார்.

‘‘உங்கள் பதவி பறிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?’’ என்று கேட்டபோது, ‘‘ஒரு நல்லதுக்கு சொல்கிறோம்... ஆனால் அதில், பல முடிவுகளை பொதுச்செயலாளர் எடுக்கிறார். அவர் எடுக்கிற முடிவு பற்றி கருத்து சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும்’’ என்றார்.

‘‘தொண்டர்கள் மனநிலை எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டபோது, ‘‘நான் சொன்ன கருத்து சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள். மாறுபட்ட கருத்து இல்லை. ஓட்டுக்காக சேரனும், கட்சி வளருனும்.. அவ்ளோதான். வேறு நோக்கம் எனக்கு இல்லை. அப்படி வேறு ஏதாவது நோக்கம் இருந்திருந்தால் அதை சொல்லியிருக்க மாட்டேன்’’ என்றார். ‘‘ஒரு மூத்த அமைச்சராக இருந்த உங்களை திடீரென நீக்கியதில் தொண்டர்கள் மனநிலை என்ன?’’ என்றபோது, ‘‘தொண்டர்கள் எனக்கு ஆறுதல் சொல்லிட்டு போய்ட்டு இருக்காங்க. நீங்கள் தைரியமாக இருங்கள் எனக்கூறி செல்கிறார்கள். எல்லா பகுதியில் இருந்தும் தொண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். 2 நாளாக வீட்டில் இருக்கிறேன். கூட்டம் வந்துக்கிட்டு இருக்குது... 2 நாளில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரை சந்தித்து இருக்கிறேன்’’ என்றார்.

இதை தொடர்ந்து டெல்லி சென்ற செங்கோட்டையன், ஹரித்துவார் செல்லாமல் ஓட்டலில் தங்கினார். பின்னர் நேற்று இரவு 8.30 மணிக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே செங்கோட்டையனை, அதிமுக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. இதை பாஜ தலைவர்கள் யாரும் மறுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை மிரட்டுவதற்காக அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களை கையில் எடுப்பதாகவும், தங்கள் பேச்சுக்கு எல்லாம் தலையை ஆட்டும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்த்தால், அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாஜவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். எடப்பாடி பழனிசாமியை முடக்கவிடலாம் என்று கருதிதான் அதிமுக மூத்த தலைவர்களை பாஜ இயக்குவதாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால் அதிமுகவை உடைக்க பாஜ மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இதை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லயில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* கட்சியில் இருந்தே டிஸ்மிஸ்?

கடந்த 6ம் தேதி கட்சி பதவிகள் பறிக்கப்பட்டபோது செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், பதவி பறிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அதே நேரத்தில் எடப்பாடிக்கு விதிக்கப்பட்ட 10 நாட்கள் கெடுவுக்கு பிறகு மீண்டும் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பு செய்யும் பணியை தொடங்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபி, நம்பியூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள், கோபி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சுமார் 3 ஆயிரம் பேர் தங்கள் கட்சி பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால், ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்று அல்லது நாளை செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தே நீக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே, செங்கோட்டையன் அவசர, அவசரமாக டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* நோ கமென்ட்ஸ் சஸ்பென்ஸ்

பா.ஜ., மூத்த தலைவர்கள் யாராவது உங்களிடம் பேசினார்களா?’’ என்று செங்கோட்டையனிடம் கேட்டபோது, ஒருமுறை ‘நோ கமென்ட்ஸ்’ என கூறினார். மறுமுறை அதே கேள்வியை கேட்டபோது ‘சஸ்பென்ஸ்’ என்றார். ‘‘ஓபிஎஸ் சந்திப்பதாக கூறப்பட்டதே’’ என்று கேட்டபோது, ‘‘ஓபிஎஸ் சந்திப்பதாக ரூமர் வந்தது. ஆனால், அப்படியில்லை’’ என்றார். ‘‘எடப்பாடி தரப்பில் இருந்து யாரும் பேசினார்களா?’’ என்றபோது, ‘நோ கமென்ட்ஸ்’ என்றார்.