சென்னை: சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் அருள்நிதி வீடுகளுக்கு இமெயிலில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைதொடர்ந்து அபிராமபுரம் போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சென்னை பசுமை வழிசாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினர். இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது.
அதேபோல் கோடம்பாக்கம் போலீசார் நடிகர் அருள்நிதி வீட்டில் சோதனை நடத்தினர். அதுவும் புரளி என தெரிந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட முறை சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு நிறுவனங்கள், தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபரை, பிடிக்க சென்னை சைபர் க்ரைம் மற்றும் மாநில சைபர் க்ரைம் இணைந்து ஒன்றிய உள்துறை உதவியுடன் தேடி வருகின்றனர்.

