Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பு; யார் இந்த செங்கோட்டையன்? துரோகக்காரர் என அதிமுகவினர் குற்றச்சாட்டு

சென்னை: கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், குள்ளம்பாளையம். அதிமுகவை ேசர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் 1977ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட விரும்பி, எம்ஜிஆரை சந்தித்து சீட் கேட்டார். ஆனால், அப்போது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் தலைவராக வெற்றி பெற்ற எழிலழகனுக்கு சத்தியமங்கலத்தில் போட்டியிட சீட் தருவதாக எம்ஜிஆர் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

இதனால் உங்களுக்கு சீட் வேண்டும் என்றால், எழிலழகனிடம் கேளுங்கள். அவர் போட்டியிடாவிட்டால் உங்களுக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால், எழிலழகனை சந்தித்த செங்கோட்டையன், ‘நீ படித்த பையன். நான் 10ம் வகுப்பு பெயில். அதனால் எனக்கு அரசியலை விட்டால் வேறு எதுவும் தெரியாது. நீ படித்து வேலைக்கு சென்று விடலாம். நான் அரசு வேலைக்கு செல்ல முடியாது. இதனால் எம்எல்ஏ சீட்டை எனக்கு கொடு’ என்று கேட்டுள்ளார். இதனால் அவரும் சீட்டை விட்டுக் கொடுத்து விட்டார். இதனால்தான் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 8 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

எம்ஜிஆருடன் ஆரம்ப கட்டத்தில் பயணம் செய்தவர் செங்கோட்டையன். 1975ம் ஆண்டே எம்ஜிஆரிடம் பெரிய அளவில் பெயர் பெற்றார். கோவையில் எம்ஜிஆர் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் செங்கோட்டையனை பொருளாளராக நியமித்தார். பின்னர் கோவையில் மிகப்பெரிய அளவில் விவசாயிகள் மாநாடு நடைபெறும் என்று எம்ஜிஆர் அறிவித்தார். இந்த பொறுப்பை செங்கோட்டையனிடம் வழங்கினார்.

அப்போது, மாநாட்டில் கலந்து கொள்ளும் விவசாயிகள் ரூ.2 நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி மாநாட்டையும் நடத்தினார். அதில் மீதமுள்ள ரூ.2 லட்சம் பணத்தை எம்ஜிஆரிடம் கொடுத்தார். 2வது தேர்தலில் கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட அவரது சித்தப்பாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா அதிமுக கட்சிக்குள் வந்தார். அப்போது ஜா அணி, ஜெ. அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டது. அப்போதும், ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுடன் பயணம் செய்தவர் செங்கோட்டையன். அவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் காலக்கட்டத்தில் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்திற்கான ஸ்கெட்ச் மேப் போட்டு கொடுப்பவரே செங்கோட்டையன்தான். ஜெயலலிதா எங்கெல்லாம் பிரசாரம் செய்ய வேண்டும், எப்படி பிரசாரம் செய்ய வேண்டும், எங்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்பது குறித்து தெளிவான மேப் போட்டு கொடுப்பார். இதன்மூலம் ஜெயலலிதாவுக்கும் மிக நெருக்கமானவராக செங்கோட்டையன் திகழ்ந்தார்.

பலமுறை எம்எல்ஏவாக இருந்தும் எம்ஜிஆர் அவரை அமைச்சராக்கவில்லை. 1991ல் ஜெயலலிதா அவரை போக்குவரத்து துறை அமைச்சராக்கினார். அப்போது பெரிய அளவில் ஊழல் வழக்கில் சிக்கினார். 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் செங்கோட்டையனும் தோல்வி அடைந்தார். 2001ம் ஆண்டு தேர்தலில் செங்கோட்டையனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

2006 ல் போட்டியிட்டு, விவசாயத்துறை அமைச்சரானார். தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது ஜெயலலிதா 2 முறை செங்கோட்டையன் வீட்டிலேயே தங்கி உள்ளார். செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோது, எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைத்ததே செங்கோட்டையன்தான். பின்னர் எடப்பாடியை ஜெயலலிதா அமைச்சராக்கினார். செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோது, செங்கோட்டையனின் உதவியாளரின் மனைவி குறித்தும், தனியாக வீடு எடுத்துக் கொடுத்திருப்பது குறித்தும் அவரது மனைவியும், மகனும் ஜெயலலிதாவை சந்தித்து புகார் அளித்தனர்.

இந்தப் புகாரைப் தொடர்ந்து விசாரணைக்கு போயஸ்கார்டனுக்கு ஜெயலலிதா வரச்சொன்னார். வழக்கமாக அமைச்சர்களிடம் ஜெயலலிதா விசாரிக்கிறார் என்றால் எல்லோரும் அச்சத்துடனே செல்வார்கள். விசாரணை முடிந்து போயஸ்கார்டனை விட்டு வெளியே வந்தபோது, சைரன் வைத்த கார் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். கார் இருந்தால் அமைச்சர் பதவி இருக்கிறது என்று பொருள். கார் இல்லாவிட்டால் அமைச்சர் பதவி காலி என்று அர்த்தம். அப்படித்தான் விசாரணை முடிந்து போயஸ்கார்டனை விட்டு வெளியே வந்த செங்கோட்டையனின் கார் காணாமல் போயிருந்தது.

இதனால் நடந்தே, போயஸ்கார்டனில் இருந்து கதீட்ரல் சாலை வரை சென்றார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகேதான் ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். டிவியை பார்த்தபோது அவரது பதவி பறிப்பு என்று செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை செங்கோட்டையனுக்கு பதவி கொடுக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம், உதவியாளரின் மனைவி விவகாரம் குறித்து செங்கோட்டையனிடம் ஜெயலலிதா விசாரித்தபோது, இது எனது தனிப்பட்ட விவகாரம் என்று கூறியுள்ளார். இந்த கோபத்தில்தான் அவருக்கு 2வது முறை பதவி கொடுக்கவில்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அனைவரும் மீண்டும் அமைச்சர்களானார்கள். அப்போது செங்கோட்டையன் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெறாததால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. பின்னர் எடப்பாடி அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர் பதவி இருக்கும் வரை எடப்பாடியை எதிர்த்து பேசவில்லை. அப்போதும் செங்கோட்டையனுக்கு எதிராக மற்றொரு அமைச்சர் கருப்பண்ணன் செயல்பட்டார். அவரைத்தான் எடப்பாடி ஆதரித்தார். ஆனாலும் அமைதியாக இருந்து விட்டார்.

தற்போதும் செங்கோட்டையன் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார். இதனால் தன்னுடைய ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ள கட்சியில் இருந்து வெளியேறி, சொந்த தொகுதியை விட்டு வெளி தொகுதியில் ஓட்டு வாங்க முடியாத தலைவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். ஜெயலலிதா கொடுக்காத அமைச்சர் பதவியை செங்கோட்டையனுக்கு எடப்பாடி கொடுத்தார். அப்படி இருந்தும் அவருக்கு துரோகம் செய்து செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி உள்ளார். தற்போது, எடப்பாடி பழனிச்சாமி இறங்கிவருவார் என்று எதிர்பார்க்கிறார். கண்டிப்பாக இதில் செங்கோட்டையன் தோற்கடிக்கப்படுவதோடு கட்சியில் காணாமல் போவார். கோபியில் டெபாசிட் இழப்பார் என்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள்.