அதிமுக அணிகளை ஒருங்கிணைக்க அமித்ஷா முயற்சி எடுக்கிறார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது; "அமித்ஷா முயற்சி கைகூடும் என்று காத்திருந்தோம்; அது நடக்கவில்லை. அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி கைகூடாததால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அமமுகவை சிறிய கட்சி என பாஜக நினைத்திருக்கலாம். தேவை ஏற்பட்டால் டெல்லி சென்று தலைவர்களை சந்திப்பேன். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசர முடிவல்ல; நிதானமாக எடுத்த முடிவு.
அதிமுகவை ஒருங்கிணைக்கவில்லை என்றால் அக்கட்சி ஆட்சிக்கு வருவது கனவாகவே போகும். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். யாரை எதிர்த்து கட்சி தொடங்கினோமோ அவரை தூக்கி சுமக்க நாங்கள் தயாரில்லை. நைனார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாள தெரியவில்லை. ஓ.பி.எஸ். கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து நைனார் பேசியது ஆணவமாக இருந்தது. எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துதான் அமமுக தொடங்கப்பட்டது. எடப்பாடி திருந்துவார் அல்லது திருத்தப்படுவார் என 4 மாதம் காத்திருந்தோம். எடப்பாடி பழனிசாமி நாளுக்கு நாள் ஆணவத்துடன் பேசி கொண்டே செல்கிறார்.
இனியும் அமைதியாக இருந்தால், பழனிசாமி பேச்சை ஆமோதிப்பது போலாகிவிடும் என்பதால் வெளியே வந்தோம். கூட்டணிக்கு அதிமுக வந்ததால் நாங்கள் தேவையில்லை என பாஜக நினைத்தது. கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நயினாரோ, பாஜகவோ காரணமில்லை. ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் இணைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளோம். 2026 தேர்தல் கூட்டணிக்கு எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன; அதில் ஒன்றை தேர்வு செய்வோம். டிசம்பர் மாதத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். ஆட்சி அமைக்கப்போகிற கூட்டணியில் இருப்போம். இடர்பாட்டை சரிசெய்தால் மட்டுமே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர முடியும். என்று கூறியுள்ளார்.