பிரிந்தவர்களை சேர்க்க எடப்பாடி தொடர்ந்து எதிர்ப்பு; நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்: குழப்பம் நீடிப்பதால் பன்னீர் கூட்டம் தள்ளிவைப்பு
சென்னை: பிரிந்தவர்களை சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அதிமுக கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. இதனால் நயினார் நாகேந்திரன் இன்று காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதி ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் ஜூரம் தற்போது அரசியல் கட்சிகளிடையே தொற்றியுள்ளது. கூட்டணிக்கான கூட்டல், கழித்தல்கள் போடப்பட்டு வருகின்றன. திமுகவைப் பொறுத்தவரை கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தற்போது தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மக்கள் நீதி மய்யமும் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் கூட்டணி இன்றும் இறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. அதிமுக, பாஜக மட்டுமே கூட்டணியாக அறிவித்துள்ளன. அதோடு சில உதிரி கட்சிகளும் கூட்டணியில் இருப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் முக்கிய கட்சிகளான பாமக, தேமுதிக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என பலரும் கூட்டணிக்கு வருவார்களா என்ற சந்தேகம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதேநேரத்தில் பாமக இரண்டாக உடைந்துள்ளது. இதனால் இரு பிரிவுகளுடனும் அதிமுக பேச முயற்சித்து வருகிறது. இரு கட்சிகளுமே அதிக சீட்டுகளை கேட்டு வருகின்றன. இதனால் ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் இணையும் என்று கூறப்பட்டு வருகிறது. தேமுதிகவும் திமுக கூட்டணிக்கு வரும் என்று பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவுக்குள் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதில் இருவரையும் கட்சியில் சேர்க்க முடியாது. அவர்கள் தனி கட்சி ஆரம்பித்து, அதிமுக கூட்டணியில் இணையட்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். இதற்கு டிடிவி தினகரன் சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, அதிமுகவில் இணைந்து, போட்டியிடுகிறேன். தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக உள்ளார். தனிக்கட்சி ஆரம்பித்தால், நான் விஜயின் தவெகவுடன் இணைந்து போட்டியிடுவேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். இதனால் டிடிவி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நெருக்கமான அண்ணாமலையை வைத்து அவர்களை சந்தித்துப் பேச அமித்ஷா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டிடிவி கூட்டணிக்குத் தயார் என்றார். பன்னீர்செல்வமோ கூட்டணி வேண்டாம். கட்சியில் இணைகிறேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். இந்த தகவலை டெல்லி சென்று அமித்ஷாவை அண்ணாமலை இரு நாட்களுக்கு முன்னர் சந்தித்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை, தமிழக பாஜக தலைவர் நயினார் சென்று சந்தித்துப் பேசினார்.
அப்போது கூட்டணி குறித்து பேசப்பட்டுள்ளது. பாஜக மேலிடம் கூறியபடி 70 தொகுதிக்கான பட்டியலை கொடுத்து, அதில் 40 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் அங்கு பேசப்பட்ட தகவலுடன் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிறகு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடியிடம் பேசியது குறித்து தகவலை தெரிவிக்கிறார். அதன்பின்னர் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து அமித்ஷா முக்கிய முடிவுகளை எடுக்கிறார். அமித்ஷா வருகிற 15ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. ஆனால் கூட்டணி இன்றும் இறுதி செய்யப்படாததால், அவரது வருகை இறுதியாகவில்லை. அதேநேரத்தில் 15ம் தேதி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் தன்னை இணைக்காவிட்டால் முக்கிய முடிவுகளை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது அமித்ஷாவிடம் இருந்து பதில் வராததால், அவரும் தனது நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். இதனால் அதிமுக கூட்டணி இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் அந்தக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் மட்டுமல்லாது தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


