மோடியிடம் முழுமையாக சரணடைந்து விட்டார் எடப்பாடி புதிய அடிமைகளை தேடும் பாஜ: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
திருச்சி: மோடியிடம் எடப்பாடி முழுமையாக சரணடைந்து விட்டார். தற்போது புதிய அடிமைகளை பாஜ தேடுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது: 75 ஆண்டுகளாக பல்வேறு அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும் திமுக மீது கட்டவிழ்த்து விட்டாலும், திமுகவை தொட்டு கூட பார்க்க முடியவில்லை. ஒன்றிய பாசிச பாஜ அரசு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அடிமைகளுடன் சேர்ந்து என்னென்னமோ திட்டம் தீட்டுகிறார்கள். அந்த தடையெல்லாம் உடைத்து சிறந்த ஆட்சியை முதல்வர் வழங்க வருகிறார்.
திமுகவில் பல்வேறு சார்பு அணிகள் உள்ளன.
ஆனால் அதிமுகவில் நம்மை விட பல அணிகள் உள்ளது. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, செங்கோட்டையன் அணி என பல அணிகள் உள்ளது. பாஜ உடன் கூட்டணி இல்லை என கூறிய எடப்பாடி பழனிச்சாமி, தற்பொழுது பாஜவுக்கு நன்றி கடனாக இருக்கிறோம் என பேசி உள்ளார். காரை மாற்றுவதும், காலை மாற்றுவதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிது கிடையாது. ஜெயலலிதா இருந்தவரை அவர் காலில் விழுந்திருந்தார். அவர் இறந்தவுடன் சசிகலாவின் காலை பிடித்தார். பின்னர், அவரை சிறைக்கு அனுப்பிவிட்டு டிடிவி.தினகரனின் காலை பிடித்தார். அதன்பிறகு சிறிது காலம் மோடியின் காலையும், அமித்ஷாவின் காலையும் பிடித்தார். தற்போது முழுமையாக மோடியின் காலில் சரணடைந்துவிட்டார். எடப்பாடி பழனிச்சாமியை, தமிழ்நாட்டு மக்கள் செல்லமாக முகமூடி பழனிச்சாமி என தான் கூறுகிறார்கள். டெல்லிக்கு போகும் போது சிரித்து கொண்டே சென்றவர் அமித்ஷாவை சந்தித்து விட்டு, வரும் போது முகத்தை மூடிக்கொண்டு வருகிறார். அதற்கு ஏன் எனக்கேட்டால் முகம் வேர்த்து விட்டதாக கூறுகிறார்.
அவருக்கு முகம் வேர்க்கவில்லை. கண் தான் வேர்த்துள்ளது. தமிழ்நாட்டை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என பழைய அடிமை, அதிமுகவின் துணையோடு பாஜ வந்துள்ளது. தற்பொழுது புது அடிமைகளையும் அவர்கள் தேடிக்கொண்டுள்ளார்கள். நான் யாரை கூறுகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அவர்களுக்கு அடிமைகள் சிக்குவார்கள். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவினர் இருக்கும் வரை பாஜவால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது. நாம் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், 2026ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் நிச்சயம் உதிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.