எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்தில் ரோடு ஷோ காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி விட்ட துணை முதல்வர்: வைரலாகும் வீடியோ; பொதுமக்கள் பாராட்டு
சேலம்: சேலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு வங்கிக்கடன் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் வந்தார். அவர், சேலம்-பெங்களூரு பை-பாஸ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நிலையில், மாலை 5 மணிக்கு அரசு உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தை நடத்த, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டார். ஓட்டல் வாசலில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 8 கி.மீ., தூரத்திற்கு ரோடு ஷோ சென்றார்.
அப்போது சாலையின் இருபுறத்திலும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரளாக நின்றிருந்து துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக இருவண்ண பலூன்கள், கொடிகளை கையில் ஏந்தியபடி வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். சேலம் 5 ரோடு மற்றும் புதிய பஸ் நிலையத்தை கடந்து, 4 ரோடு பகுதியில் வந்த போது, துணை முதல்வரின் காருக்கு பின்னால், 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்தை கேட்டதும், தான் வந்த காரை ஓரமாக நிறுத்தும்படி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். உடனே கார் ஓரமாக நிறுத்தப்பட்டு, அந்த 108 ஆம்புலன்சுக்கு வழி விடப்பட்டது. ஆம்புலன்ஸ் அங்கிருந்து சென்ற பின், துணை முதல்வரின் கார் புறப்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், கைகளை தட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, தனது பிரசாரத்தில், 108 ஆம்புலன்ஸ் கூட்டம் நடக்கும் சாலைக்கு வந்தால் அடித்து நொறுக்கவும், அதன் டிரைவரை அதே ஆம்புலன்ஸ்சில் நோயாளியாக அனுப்பவும் செய்து விடுவோம் எனக்கூறினார். அதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தின் போது, 108 ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில், துணை முதல்வர் சென்ற சாலையில், 108 ஆம்புலன்சுக்கு துணை முதல்வர், தனது காரை ஓரமாக நிறுத்தச் செய்து வழி விட்டது மக்கள் மத்தியில் ெபரும் வரவேற்ப்பை பெற்று உள்ளது.