Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

எடப்பாடி அமைதியாக இருப்பதா? ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்கணும்... இல்லாவிட்டால் போராட்டம் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா, அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக என்பது எப்படிப்பட்ட கட்சி, அந்தக் கட்சியை சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று தரக்குறைவாகவும் நாகரிகம் இல்லாமலும் பேசியதை அக்கட்சி செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு இருக்க வேண்டும்.

அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவர் அமைதியாக இருக்கிறார். அதிமுக 53 ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட ஒரு மாநில கட்சி. ஆனால் காங்கிரஸ் பேரியக்கம் 140 ஆண்டுகள் வரலாறு கொண்ட ஒரு மாபெரும் கட்சி. தமிழ்நாட்டில் முதன்மை கட்சி என கூறும் அதிமுக 1996 தேர்தலில் எத்தனை சீட்டுகளை வென்றனர். அதிமுகவில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரண்டு இடங்களில் போட்டியிட்டு 1996 தேர்தலை சந்தித்தார்.

அப்போது அவரது நிலைமை என்ன ஆனது. இதையெல்லாம் ராஜேந்திர பாலாஜி பேசுவாரா? 1996ல் அதிமுக படுதோல்வி அடைந்த போது நாங்கள் அந்த கட்சியை கலைக்க வேண்டும் என்று சொன்னோமா? இதையெல்லாம் நினைத்து பார்த்து ராஜேந்திர பாலாஜி பேச வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கிராமங்களிலும் பரவி இருக்கும் கட்சி காங்கிரஸ். ஆனால் விருதுநகரில் கூட இன்று அதிமுக இல்லை. காங்கிரஸ் தொடர்பான இழிவான கருத்துக்கு ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையென்றால் அவரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்ததை வைத்து ஓட்டு மொத்த இஸ்லாமியர்களையும் குற்றவாளிகள் என பாஜ சித்தரிக்க முயற்சிப்பது கேவலமான செயல். ஒருவர் தவறு செய்தால் அனைவரும் செய்ததாக ஆகாது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தங்களை அழைக்க வேண்டும் என தவெக கேட்பதில் தவறில்லை. அதனை தேர்தல் ஆணையம் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.