காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த கார்த்தி சிதம்பரம் எம்பி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜவின் அஜன்டா என்பது கல்வி நிறுவனங்களை கைப்பற்றுவது. இது தமிழ்நாட்டில் எடுபடாது. எடப்பாடி பழனிசாமி தேர்தலில் மக்களை சந்தித்து வெற்றி பெற்று முதல்வர் ஆனவர் இல்லை. ஒரு சரித்திர விபத்தால் முதல்வர் ஆனார். எடப்படி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் தோல்வியை தழுவியுள்ளார். 2 பாராளுமன்ற தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். அவரின் டிராக் ரெக்கார்ட் நன்றாக இல்லை. 3 இன்னிங்சிலும் அவுட், 4வது இன்னிங்சிலும் அவுட் ஆகப்போகிறார். சீமான் சென்சேசனல் பாலிடிக்ஸ் செய்கிறார். இவ்வாறு கூறினார். எடப்பாடியை தொடர்ந்து, ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாரே என கேட்டபோது, ‘‘யார் வேண்டும் என்றாலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். காரைக்குடி பக்கம் வந்தால் கோயில்கள் அதிகமாக உள்ளது, அப்படியே செட்டிநாடு சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்லலாம்’’ என்றார்.
Advertisement