Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துரோகத்துக்கு நோபல் பரிசு எடப்பாடிக்குத்தான்; நோட்டீஸ் கூட கொடுக்காமல் நீக்கம்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

ஈரோடு: என்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனுடன் சந்தித்ததன் எதிரொலியாக, அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். முன்னாள் எம்.பி. சத்தியபாமா, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், கோபி, அந்தியூர் பகுதி நிர்வாகிகள், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 1975-ல் நடைபெற்ற அதிமுக முதல் பொதுக்குழுவை நடத்த எம்.ஜி.ஆர். எனக்கும் வாய்ப்பு வழங்கினார். அதிமுகவில் பல பொறுப்புகளில் இருந்தவன் நான். ஜெயலலிதா இருந்தபோதும் அவர் சொல்படி கட்சி பணிகளை ஆற்றினேன். இமயமே தன் தலையில் விழுந்தாலும் சறுக்காமல் இருப்பவர் செங்கோட்டையன் என ஜெயலலிதாவே புகழ்ந்துள்ளார். விசுவாசமாக இருந்ததால்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு பொறுப்புகளை தந்தனர். அதிமுக பிளவுபட கூடாதென்று 2 முறை எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னை கேட்டுக் கொண்டார். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எடப்பாடிக்காக பரிந்துரை கடிதத்தை வழங்கி எல்லோரிடம் ஒப்புதல் பெற்றவன் நான். அனைவரையும் இணைக்க 6 பேர் எடப்பாடியை சந்தித்ததாக பத்திரிகையில் எழுதிய பின்னரும் எடப்பாடி மறுப்பு தெரிவித்தார். அனைவரையும் ஒன்றிணைத்தால் தான் வெற்றியை பெற முடியும்

அனைவரையும் ஒருங்கிணைக்கும் கருத்தை ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன்2024 மக்களைவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அதிமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என கூறியதால் எனது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டது. அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பேசினேன். எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேவர் ஜெயந்தியில் பங்கேற்றேன். அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்ற நோக்கோடுதான் பழனிசாமி 10 நாளில் ஒன்றிணைக்கும் பணியை தொடங்க வேண்டும் என கூறினேன்.

2026 ல் அதிமுக தோல்வியுற்றால் கேள்வி கேட்பார்கள் என்பதால் பேட்டியளித்தேன். தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்கு கிடைத்த பரிசுதான் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏ1 ஆக எடப்பாடி உள்ளார். நான் பி டீம்மில் இல்லை; எடப்பாடிதான் ஏ1 ஆக உள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை பற்றி பேச பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடிக்குதான் பொறுப்பு இருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது; கண்ணீர் வடிக்கிறேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் கண்ணீர் சிந்துகிறேன்.

அதிமுகவில் 53 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். எடப்பாடி அதிமுகவுக்கு வருவதற்கு முன்பே அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவன் நான். 53 ஆண்டு காலம் பணியாற்றிய எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம். சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்ற நிலையில் எடப்பாடி இருக்கிறார். சசிகலாவிடம் இருந்து எடப்பாடி எப்படி முதல்வர் பதவியை பெற்றார் என்பது நாடறியும். கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். விதியின் அடிப்படையில் என்னை நீக்கவில்லை; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

துரோகத்தின் நோபல் பரிசு எடப்படி பழனிசாமிக்குதான் கொடுக்க வேண்டும். தற்காலிக பொதுச்செயலாளரான எடப்பாடி 53 ஆண்டுகாலம் கட்சியில் உள்ள என்னை நீக்கியுள்ளது கேள்விக்குறியானது. என்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று கூறினார்.