கோவை: கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி உள்ளவர், உழைத்தவர்களையும், தொண்டர்களையும் மதிக்கக் கூடியவர். ஆனால், எடப்பாடியார் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் அவர். முதல்வராக இருந்தபோது ‘சின்னம்மா, சின்னம்மா’ என்று சொன்னவர், அப்பா, அம்மாவை மறக்காதீர்கள் என எப்படி கூறலாம்?,” நோயாளி என்று சொல்வதற்குப் பதிலாக பயனாளி என்று சொல்வதில் என்ன தவறு? காலத்திற்கு ஏற்ப மொழி வளர்ச்சி அவசியம். ஆனால், எடப்பாடியாருக்கு அதைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை.
கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்லும் அவருடைய தமிழ் ஆற்றல் அவ்வளவுதான். மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம், கோவையில் பெரியார், சேலத்தில் பாரதிதாசன், கடலூரில் அஞ்சலையம்மாள், திருச்சியில் காமராஜர், நெல்லையில் காயிதே மில்லத் என அனைத்து தலைவர்களின் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. பெயர் வைப்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்கக் கூடாது. அதிமுகவின் கூட்டணி வலுவானதா, நஞ்சு போனதா, தோற்கும் கூட்டணியா என்பதைச் சொல்ல முடியாது. ஆனால், இந்த முறையும் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.