சென்னை: எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாமே பொய் தான். அதற்காக தான் உருட்டலும் திரட்டலும் என்று பெயர் வைத்திருக்கிறார் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு குற்றம் சாட்டினார். சென்னை, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் நிலைப்பாடு மாறிமாறி பேசுவது தான். பார்த்தாலே பெரிய பாக்கியம் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியவர், பார்க்கவில்லை என்ற கோபத்திற்காக தற்போது தான் ஞானோதயம் பிறந்து ஒன்றிய அரசை எதிர்க்க தொடங்கி இருக்கிறார். இந்த எதிர்ப்பு நியாயமான முறையில் இருந்தால் நாங்களும் அதை வரவேற்போம்.
எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாமே பொய் தான். அதற்காக தான் உருட்டலும் திரட்டலும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கு தகுந்த ஒரே தலைவர் தமிழக அரசியல் களத்தில் எடப்பாடி ஒருவர் தான். கலைஞர் தான் தஞ்சை பெரிய கோயிலுக்கு 1000 ஆண்டு விழாவை எடுத்தவர். தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகுதான் ஆன்றோர், சான்றோர் பெருமக்கள், சித்தர்கள் ஆகியோருக்கு விழா எடுக்கின்ற அரசு இந்த அரசு.
ஆகவே அறியாமையில் பேசுகின்ற விஜய்க்கு பதில் கூறிக் கொண்டிருப்பதற்கு நேரம் போதவில்லை. முதல்வர் இரு மொழி கொள்கைக்காக 10,000 கோடி நஷ்டம் என்றாலும் அதை ஏற்றுக் கொண்டு சமாளிப்பதற்கு தமிழக அரசு தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். ஒன்றிய அரசுக்கு துதி பாடுகின்றவர்கள் நிதியை பெற்று தருவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விசிக தலைவர் திருமாவளவன் கொள்கை பிடிப்புடன் இருக்கும் தலைவர். எந்த சூழல் வந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விட்டு நகர மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிகளில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், சென்னை மாநகராட்சி பணிகள் நிலை குழு தலைவர் சிற்றரசு, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.