எடப்பாடியை பார்த்தால் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது ஒன்று கால்; மற்றொன்று கார்: துணை முதல்வர் உதயநிதி கிண்டல்
சென்னை: எடப்பாடி பழனிசாமியை பார்த்தால் ஞாபகத்துக்கு வருவது ஒன்று கால், மற்றொன்று கார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த திமுக - 75 அறிவு திருவிழாவில் அவர் பேசியதாவது: திமுக சார்பாக 1,120 பக்கங்களை கொண்ட புத்தகம், 55 கடைகள் இருக்கும் புத்தக கண்காட்சி, 10 அமர்வுகள், 44 சிறப்பு பேச்சாளர்கள் என இரண்டு நாள் அறிவு திருவிழா வெற்றிக்கரமாக நடத்தி காண்பித்துள்ளோம். அதிமுகவால் இதுபோன்ற விழாவை நடத்த முடியுமா?
நாம் நடத்தியுள்ள விழாவின் பெயர் அறிவு திருவிழா; அதிமுக நடத்தினால், அதை அடிமை திருவிழா என்ற நிகழ்ச்சியாக நடத்தி காண்பிப்பார். கடைந்து எடுத்த அடிமை என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். பாசிச பாஜவால் நேரடியாக தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடியவில்லை. அதனால் வேறு வேறு வேடமிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை பார்க்கும்போது எல்லாம் இரண்டு விஷயங்கள் மட்டுமே என் நினைவில் வரும். ஒன்று கால், இன்னொன்று கார். ஒரு கட்சியின் தலைவர் மற்றொரு கட்சிக்காரரை பார்க்க எதற்கு நாலு கார் மாறி, முகத்தை மூடி செல்ல வேண்டும்.
ஜெயலலிதா இருந்த போது அவரது கால், அவர் மறைந்ததும் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் கால், அவர் ஊழல் வழக்கில் சிறை சென்றவுடன், டிடிவி தினகரன் கால், கொஞ்சம் நாள் பிரோமோஷன் வாங்கி மோடி மற்றும் அமித்ஷாவின் கால், இதுவரை விழுந்த கால்கள் பத்தவில்லை என்று புதிய கால் தேடிக்கொண்டு இருக்கிறார். அதிமுக தொண்டர்களை பார்க்கும் போது நமக்கு பாவமாக தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக ஏமாற்றுவதை கண்டு.
சில வாரத்திற்கு முன்பு மிக பிரம்மாண்டமான கட்சி நம்முடன் கூட்டணிக்கு வரவுள்ளது என்றார். இதனையடுத்து 10 நாட்களுக்கு முன்பு அவரது பிரச்சார கூட்டத்தில் வேறு ஒரு கட்சியின் கொடியை அவர்களே காண்பித்து பிள்ளையார் சுழி போட்டாச்சு என கூறினார். எடப்பாடியை பார்த்தால் பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவன் சுத்தமாக படிக்காமல், விளையாடிக்கொண்டு இரவு முழுவதும் தூங்காமல், குளித்துமுடித்து வீட்டில் உள்ள சாமி படத்திற்கு முன்பு நின்று வேண்டிக்கொண்டு இறுதியில் பள்ளிக்கு சென்றவுடன் கேள்வி தாளை வாங்கி ஒன்றும் தெரியாமல் முழிக்கும் நிலையில் தான் அவர் உள்ளார்.
கேள்வி தாள் வந்தவுடன் முதலில் பிள்ளையார் சுழி போடுவார்கள் ஆனால் அதில் ஒன்றும் எழுதாமல் எல்லாம் மேல இருக்கவன் பார்த்துக்கொள்வான் என அப்படியே விட்டுவிடுவர். அந்த நிலையில் தான் அவரும் உள்ளார். வரும் தேர்தலில் உங்களின் எழுச்சி மற்றும் உணர்ச்சி அடுத்த 4 மாத காலம் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களுடன் இருக்கிறேன். தேர்தலில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதை நீங்கள் உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்

