காங்கயம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு காங்கயத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். எடப்பாடி வருகையையொட்டி கூட்டம் சேர்ப்பதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.300 வீதம் கிளை நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களிடமே ரூ.200 மட்டும் விநியோகியுங்கள், ரூ.100ஐ நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் என நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூறியதால் கிளை நிர்வாகிகள் குஷி அடைந்துள்ளனர்.
இவ்வாறு காங்கயம் நகரப்பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. எடப்பாடி வந்து சென்றதும் ஆங்காங்கே வீதிகளில் பொதுமக்கள் காத்திருந்தனர். இரவு 11 மணிக்கு வந்த அதிமுக நிர்வாகிகள் டோக்கன்களை பெற்று பணத்தை விநியோகித்தனர். அடுத்தமுறை இப்படி காக்க வைத்தால் அமௌண்ட் அதிகமா தரணும் பார்த்துக்கங்கனு சிலர் நிர்வாகிகளை வம்பிழுத்தனர்.
எடப்பாடி பழனிசாமி இரவு 7 மணிக்கு காங்கயம் வருவார் என கூறப்பட்டிருந்தது. மாலை 5 மணி முதல் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் இரவு 9.20 மணிக்கு வந்த அவர் 10.02 மணிக்கு பேசிவிட்டு கிளம்பினார். பொதுமக்கள் யாரும் கலைந்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக பணத்திற்கு பதில் டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் மக்கள் நிகழ்ச்சி முடிந்தபின் டோக்கனை கொடுத்து பணம் வாங்கிச் சென்றனர். முதலிலேயே பணம் கொடுத்து அழைத்து வந்தால், பாதியில் மக்கள் கலைந்து போய்விடுகிறார்கள் என்பதற்காக, அதிமுகவினர் டோக்கன் பார்மூலாவை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.