காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரத்தில் பேசுவதற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். இரவு 9 மணியளவில் தனது பிரசார வாகனத்தில் முக்கிய கடைவீதி வழியாக சென்று பேருந்து நிலையம் முன்பு பேசினார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு தந்தனர். மேலும் பிரசாரம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றதால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அங்கு பேசியதால் பேருந்துகள் புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனை அறிந்த ஓட்டுநர்கள் மாற்று பாதையில் செல்ல பேருந்துகளை இயக்கியபோது அங்கு கூடியிருந்த அதிமுகவினர் ஓட்டுநர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த காவல் துறையினர், சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அதிமுகவினர் ஏற்க மறுத்த நிலையில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள், வெகுநேரம் காத்திருந்த பயணிகள் அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடி பிரசாரத்தை முடித்து சென்றபின் சகஜ நிலை திரும்பியது. இதுகுறித்து பஸ்சில் காத்திருந்த பயணிகள் கூறுகையில், பேருந்து நிலையம் முன்பு பிரசாரத்தை மேற்கொண்டதால் சென்னை மற்றும் பல ஊர்களுக்கு செல்வோர் இரவுநேர தாமதத்தால் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியதாக தெரிவித்தனர்.