Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடியை நம்பி கெட்டவர்கள் யாருமில்லையாம்... கசாப்புக்கடைக்காரரிடம் காருண்யம் தேடி சென்ற ஆடு செங்கோட்டையன்: யாரை கலாய்க்கிறார் உதயகுமார்

மதுரை: மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா என இருபெரும் தலைவர்களின் வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி தன்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்று வரலாறு படைத்திருக்கிறார். ஆனால் அவரை நம்பாமல் கெட்டவர்களுக்கு பொறுப்பேற்க முடியாது. இன்றைக்கு நம்பாமல் கெட்டவர் வரிசையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார்.

அமைதி, அடக்கம், அதிர்ந்து பேசாதவர், சிறந்த உழைப்பாளி, நடுநிலை தவறாதவர், கட்சித் தொண்டர் என்ற அவரது பொய்யான பிம்பத்தின் கட்டமைப்பு இன்றைக்கு உடைந்து போய்விட்டது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும், அவர் ஒரு சுயநலவாதி என்பதும், எப்படிப்பட்ட துரோக எண்ணத்தில் இருந்துள்ளார் என்பதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. எடப்பாடி மீது விமர்சனம் செய்து, பழி சுமத்தி எப்படிப்பட்ட வன்மத்தை கொண்டுள்ளார் என்பது அவர் பேச்சில் தெரிகிறது.

ஜெயலலிதா இருக்கின்ற வரை அமைச்சராக முடியாமல், அவரது நம்பிக்கையை ஏன் நீங்கள் பெற முடியவில்லை? ஜெயலலிதாவிற்கு நீங்கள் என்ன துரோகம் செய்தீர்கள்? அந்த துரோகத்தை நீங்கள் ஒப்புக்கொள்ள போவதில்லை. ஆனால் ஆண்டவனுக்கும், ஜெயலலிதாவிற்கும்தான் நீங்கள் செய்த துரோகம் தெரியும். அந்த துரோகத்தை நீங்கள் மறந்து விட்டு பேசுவது யாருக்கும் புரியவில்லை.

துரோகிகளின் வரிசையில் தான் ஏற்றுக்கொண்ட தலைமை மீது எவ்வளவு பழி சுமத்த முடியுமோ அவ்வளவு பழி சுமத்துகிறீர்கள். ஜெயலலிதா இறக்கும்போது உங்களது அரசியல் அஸ்தமனமாவதற்கு யார் காரணம் என்று ஒப்பாரி வைத்த நீங்கள், இன்றைக்கு அவர்களிடத்தில் அடைக்கலம் ஆகி உள்ளீர்கள். கசாப்பு கடைக்காரிடம் காருண்யம் தேடிச்சென்ற ஆட்டை போல இன்றைக்கு நீங்கள் அடைக்கலம் தேடி சென்று உள்ளீர்கள்.

ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி என்று முன்பு கூறிவிட்டு, தற்போது தூக்கம் வரவில்லை என்று கூறி அனுதாபத்தை தேட முயற்சிக்கிறீர்கள்? ஆனால் இன்றைக்கு உங்கள் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. சட்ட போராட்டம் நடத்தப் போகிறேன் என்று கூறுகிறீர்கள். உங்கள் அரசியல் பயணத்திற்காக எந்த போராட்டம் இங்கு நடத்தினாலும் அது சுயநலமாக தான் அமையுமே தவிர, பொது வாழ்க்கைக்கு பொது நலம் தராது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.