Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம்பகத்தன்மை அற்ற தலைவர் எடப்பாடி பாழும் கிணற்றில் விழுந்தவர் எங்களையும் தள்ள பார்க்கிறார்: கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை; முத்தரசன் விளாசல்

கோவை: நம்பகத்தன்மை இல்லாத தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜ என்ற பாழும் கிணற்றில் விழுந்தவர் எங்களையும் தள்ளப்பார்க்கிறார், அதிமுகவுடன் கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை என்று முத்தரசன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் பெ.நா.பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கோவை மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று எடப்பாடி அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை முற்றாக நாங்கள் நிராகரித்து விட்டோம். அதிமுகவினர் இதய தெய்வமாக போற்றிய ஜெயலலிதா, இனி பாஜவுடன் அரசியல் உறவு கிடையாது என சொன்னார். மோடியா? இந்த லேடியா? என்று கேட்டு பிரசாரம் செய்தார். அந்த பாஜவுடன் எடப்பாடி உறவு கொண்டுள்ளார். அவர்கள் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டியதுடன் காட்டுகின்ற இடத்தில் கையெழுத்திட்டார். ஜூலை 9ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் இணைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராடினோம். தொழிலாளர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து தமிழகத்தில் ஒரு கோடி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். இதில் அதிமுக, அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை.

தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் விளைவித்த கட்சி அதிமுக. அரசியல் ரீதியாக எழுப்பும் கேள்விகளுக்கு முதுகெலும்பு இருந்தால் பதில் அளிக்க வேண்டும். கோயபல்ஸ் வாயில் இருந்து உண்மை வந்தது கிடையாது. அதுபோல அவங்க வருவாங்க, இவங்க வருவாங்க என திரும்ப, திரும்ப சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைக்கவில்லை. அமித்ஷா மிரட்டி அச்சுறுத்தி எடப்பாடியை தன்னுடன் சேர்த்து கொண்டார் ஆனால், அதிமுகவினர் பாஜவை ஏற்கவில்லை. திரைப்பட காமெடியில் வரும் நானும் ரவுடி, நானும் ரவுடி என்பதைபோல எடப்பாடி நான்தான் முதல்வர் என்கிறார். அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி சொல்லை ஏற்கமாட்டேன், எங்கள் தலைவர் அமித்ஷா சொல்வதைதான் கேட்போம் என்கிறார்.

அதிமுக-பாஜ கூட்டணியில் நாளுக்கு நாள் விரிசல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. எடப்பாடியோடு கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை. அவர் நம்பகமான தலைவர் இல்லை. எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற எடப்பாடி பழனிசாமி ஏதேதோ பேசுகிறார். அதிமுக என்ற திராவிட கட்சி பாஜவோடு சேர்ந்து அழிவு பாதையை தேர்வு செய்து இருக்கிறது. பாஜ என்ற பாழும் கிணற்றில் போய் அவர்களாக விழுந்து இருக்கின்றனர். அவர்கள் விழுந்ததும் இல்லாமல் எங்களையும் சேர்த்துக் கொள்ள பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.