ஸ்ரீவில்லிபுத்தூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், ஜீயரை தனியாக சந்தித்துப் பேசினார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நயினார் நாகேந்திரனை பொறுத்தவரையில் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர். நான் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் அனைத்தையும் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அங்கு இருக்கக்கூடிய நபர்களில் யார் மீதும் கோபம் இல்லை.
அங்கு இருக்கக்கூடிய ஒரு நபரையும், அவரை சார்ந்தவர்களையும்தான் நாங்கள் ஏற்கவில்லை. அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியை தவிர முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் கூட்டணியில் மீண்டும் இணைய தயார். செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்ததற்கு வாழ்த்துக்கள். அவரது முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும். அமைதி பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் தேவர் திருமகனாரின் பெயரில் அறிவித்துள்ள சமூகவிரோத அறிவிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தெரிவித்தார்.