சேலம்: கர்நாடக மாநில அதிமுக முன்னாள் செயலாளராக இருந்த பெங்களூரூ புகழேந்தி, சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலைக்கு, கட்சியினர் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. ஆனால் அவர், நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசிய பிறகு, அவர் மீதிருந்த மரியாதை போய்விட்டது. காலில் விழுந்து பதவியை பிடித்து, 10 ஆண்டுகள் பச்சை மையில் கையெழுத்துப் போட்ட பழனிசாமியை, என்னை பார்த்து பேசுவதற்கு எந்த அருகதையும் உனக்கு கிடையாது என்று அண்ணாமலை தாக்கிப் பேசினார். அவர் இப்போது எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறியை முதல்வர் ஆக்குவாராம்? மிகவும் கீழ்தரமாக பேசிவிட்டு, ஒரு நிமிடத்தில் அண்ணாமலை மாற்றி பேசுவது ஏன்?
எடப்பாடி பழனிசாமி சொல்லி தான், அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டது. அவரை தற்போது புகழ்ந்து பேசினால் பதவி கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால், இவருக்கு பதவி கிடைக்க, எடப்பாடி பழனிசாமி விடமாட்டார். வடக்கில் இருந்து ஆயிரம் தலைவர்கள் வந்தாலும், தமிழ்நாட்டில் பாஜ ஆட்சிக்கு வரமுடியாது. விஜயுடன் ஒட்டிக்கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி நினைத்தார். அது நடக்காமல் போய் விட்டது. வரும் தேர்தலில் அதிமுகவுக்கு 4வது இடம் தான் கிடைக்கும். அதற்கு சீமானுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் கடும் போட்டி இருக்கும். ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டி, மனிதநேயம் இல்லாத பழனிசாமியாக மாறி விட்டார். அரசியலில் மூத்த தலைவரான தம்பிதுரையை அடித்தார். தெர்மாகோல் செல்லூர் ராஜூவை வண்டியில் ஏறவிடாமல் தடுத்தார். எடப்பாடியுடன் இருக்கும் அதிமுகவினர் ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள். இனி அவர் எல்லோரையும் அடிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.