எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை.. தேர்தலில் இபிஎஸ்க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: ஆர்.எஸ்.பாரதி காட்டம்!!
சென்னை: எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; “எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்றாலும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல ‘என்னை ஏன் விமர்சிக்கவில்லை?’ என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பச்சைப் பொய் பழனிசாமி.”
“ஆட்சியில் இருக்கும் போது டெல்லி பிக்பாஸ்களுக்குப் பயந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தது போலத் தமிழர்களின் வாக்குரிமையை அடகு வைக்க துணிந்துவிட்ட பழனிசாமி, SIRக்கு வக்காலத்து வாங்குவது ஆச்சரியமில்லை!”
“நானும் ரவுடிய்யா.. இந்த ஏரியாவுல ரவுடினு ஃபார்ம் ஆயிட்டேன்ய்யா” என வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துவது போல எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்ற போதும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல ’நானும் எதிர்க் கட்சித் தலைவர்தான்’ என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பச்சைப் பொய் பழனிசாமி.
சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் எனத் தொடர்ந்து பழனிசாமிக்கு எதிராகப் பேசுவது தினமும் ஊடகத்தில் வந்து கொண்டிருக்கிறது. அதனால், பதற்றமாகி தன் இருப்பையும் காட்டிக் கொள்ள ஊடகத்தில் எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.
அரசியல் முதிர்ச்சியைப் பற்றி எல்லாம் யார் பேசுவது? அதிமுக கட்சியின் பெயரில் உள்ள ’திராவிடம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று சொன்ன ‘மங்குனி’தானே நீங்கள். ’’படுத்தே விட்டான் ஐயா...’’ என்ற ரீதியில் பாஜகவுக்காக பழனிசாமி நடத்திய அடிமை ஆட்சியால் நீட் முதல் மின்சாரம் வரை தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து தவித்தோம். இப்போது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கும் அச்சுறுத்தல் தரும் பாஜகவின் SIR-யை கண்டிக்க திராணியில்லாமல் வக்காலத்து வாங்கி கொண்டிருக்கிறார்.
SIR வழியாகத் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கப் பாசிச பாஜகவும் அடிமை அதிமுகவும் போட்ட சதிக்கு எதிராக திமுக எடுத்துவரும் உறுதிமிக்க நடவடிக்கைகள் பழனிசாமியை ஆட்டங்காண வைத்திருக்கிறது. மக்களைச் சந்தித்துத் தேர்தலில் வெற்றி பெற முடியாத கோழைகள், சிறுபான்மையினர், பெண்கள், பட்டியலினத்தவர்களின் வாக்குரிமையை பீகாரில் பறித்தது போல், தமிழ்நாட்டிலும் பறித்துவிடலாம் எனப் போட்ட சதியை எதிர்த்து களப்போரட்டமும், சட்டப் போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
ஆட்சியில் இருக்கும் போது டெல்லி பிக்பாஸ்களுக்குப் பயந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தது போல இப்போது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை அடகு வைக்கத் துணிந்துவிட்ட பழனிசாமி SIRக்கு வக்காலத்து வாங்குவது ஆச்சரியமில்லை. முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை ஆதரித்து விட்டு முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனப் பச்சைப் பொய் சொன்னவர்தான் பழனிசாமி. அந்த CAA சட்டத்தை SIR வழியாக அமல்படுத்தத் துடிக்கும் பாஜகவுக்குத் துணை போகும் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் பாடம் புகுத்துவார்கள். எத்தனை தில்லு முல்லுகளைச் செய்தாலும் சரி எத்தனைக் குறுக்கு வழிகளில் வந்தாலும் சரி தமிழ்நாட்டில் பாஜகவின் எந்தச் சித்து விளையாட்டும் வெற்றி பெறாது. பழனிசாமியின் பகல் கனவும் பலிக்காது.
நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட ’திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி’ என்று பேசுவதால் பழனிசாமிக்கு பதற்றம் ஏற்பட்டுவிட்டது போல. முதலமைச்சரைப் பார்த்து, பாஜகவை விமர்சிக்காமல் எங்களையும் கொஞ்சம் விமர்சியுங்கள் என்று கெஞ்சுகிறார்.
தேர்தல் ஆணையம் வழக்கமாக மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கும் தற்போது மேற்கொண்டு இருக்கும் SIR-க்கும் வேறுபாடு தெரியாத அப்பாவி போல நடித்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பழனிசாமி. SIR படிவத்தில் எதை நிரப்புவது எதை விடுவது, முந்தைய SIR க்கு பிந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களைக் கண்டடைவதில் குழப்பம் எனப் பல்வேறு குளறுபடிகளோடு அவசர அவசரமாக இப்பணியை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தை நிர்ப்பந்திக்கும் ஒன்றிய பாஜக அரசின் நோக்கம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைத் திருடுவது மட்டுமே.
பணமதிப்பிழப்பு தொடங்கி தற்போது SIR வரை அனைத்திலும் அப்பாவி மக்களை அல்லல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கி அதைக் கண்டு ஆனந்தப்படும் பாஜகவையும் அதன் அடிமைகளையும் என்றும் தமிழ்நாடு ஏற்காது. திமுக எப்போதும் சாமானிய மக்களுக்குத் தோழனாகத் துணை நிற்கும் இயக்கம். SIR-க்கு எதிராக ஒரு பக்கம் சட்டப்போராட்டத்தையும் மறுபக்கம் மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால், அதிமுக அந்த SIR-க்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடாத பழனிசாமி பாஜகவிற்காக முட்டுக்கொடுக்க மட்டும் ஓடோடி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

