கோபி: அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக மனம் திறந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சி பதவிகளை தலைமை பறித்த நிலையில், கோபி குள்ளம்பாளையத்தில் அவரை ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா அணியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் செங்கோட்டையனை கட்சியில் முற்றிலும் கட்டம் கட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சேலத்தில் இருந்து சித்தோடு, கோபி, சத்தி வழியாக நீலகிரி மாவட்டம் செல்கிறார். எடப்பாடி வருகையையொட்டி செங்கோட்டையன் சொந்த ஊரான கோபியில் அதிமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த முறை எடப்பாடி மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக கோபி வழியாக சென்றபோது, வீட்டில் இருந்த செங்கோட்டையன் அவரை வரவேற்க செல்லாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருங்கிணைப்பு பணியை தொடங்காவிட்டால் எடப்பாடி பழனிசாமியுடனான தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஏற்கனவே செங்கோட்டையன் அறிவித்து இருந்ததால், மீண்டும் சர்ச்சை ஏற்படலாம் என்பதாலும், கோபியில் இருப்பது தனக்கு சரியானதாக இருக்காது என்று கருதிய செங்கோட்டையன் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் இருந்து திடீரென கிளம்பி சென்னை புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
அதே வேளையில் சென்னை செல்லவில்லை என்றும் அவர் கோவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சல் மற்றும் ஓய்வு இல்லாமல் உள்ளதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் கோவையில் உள்ள அவரது நெருங்கிய உறவினரின் மருத்துவமனையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.