திண்டுக்கல்லில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘‘செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு 10 நாள் கெடு விதித்துள்ளாரே’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு திண்டுக்கல் சீனிவாசன், ‘‘அவர் என்ன சொல்லியிருக்காரு. எல்லோரும் இணைய வேண்டும்னு சொல்றாரு. அதுக்கு பொதுச்செயலாளர் முடிவு எடுக்கணும்னு சொல்லியிருக்காருல.
அதுதான் எங்களுடைய கருத்தும். பொதுச்செயலாளர் கருத்துக்கு மாற்றுக் கருத்து எல்லோரும் சொல்லிக்கிட்டு வர்றாங்க. ஆனா, நாங்கள் பொதுச்செயலாளர் கூறும் கருத்துக்கு கட்டுப்படுறோம்’’ என்று தெரிவித்தார்.
மேலும், ‘‘முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் சென்று பொதுச்செயலாளர் எடப்பாடியை சந்தித்து ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளாரே’’ என்ற கேள்விக்கு, ‘‘அதெல்லாம் விட்டுருப்பா. அது இயற்கையா நடந்தது. அது உண்மையா இல்லையா என்பது எனக்கு தெரியாது. இத்தோட முடித்துக் கொள். செங்கோட்டையன் முடிவை அவர் கூறுகிறார். எங்களது முடிவு பொதுச்செயலாளர் எடுப்பதே’’ என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.