திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு வைகோவை கிண்டலாக பேசியதால் மதிமுக-நாதகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. சீமான் உட்பட இரு தரப்பிலும் 16 பேர் ஆஜராயினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன், வரும் 19ம்தேதி இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவித்தார்.
பின்னர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
எடப்பாடி பழனிச்சாமி பாஜ குரலாக ஒலிப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவர்களுடன் கூட்டணி எனும் போது, அவர்கள் கருத்தை தானே பிரதிபலிப்பார். மத்தியில் ஆட்சி அதிகாரம் அவர்கள் வசம் உள்ள நிலையில், அவர் வேறு எதை பேசுவார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது கொள்கை அல்ல. அது எங்கள் வேதம். ஆடு மாடுகள் இன்றி இயற்கை இல்லை. 2026ல் மும்முனை போட்டி நடந்தால் நடக்கட்டும், அவர்களுக்கும் எனக்கும் தொலை தூர வேறுபாடு உள்ளது.
தமிழர்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் வாழ்விடத்திலேயே மேம்படுத்த நாங்கள் எண்ணுகிறோம். இலவசம் என்ற ஒன்று இல்லாமல் எங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நாங்கள் நினைக்கிறோம். முக்கியமாக, ஆக.17ம் தேதி மரங்களின் மாநாடு நடத்தப்போகிறேன், மரங்களுடன் பேசுவோம், மரங்களுக்காக பேசுவோம். ஊழல், லஞ்சம் போன்ற எதுவும் இன்றி மக்கள் வாழ்க்கை தரம் மேம்பட நாங்கள் முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.