கோவையில் எடப்பாடி கலந்துரையாடல்; முக்கிய தொழில் அமைப்புகள் புறக்கணிப்பு: நீங்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையே... என விமர்சனம்
கோவை: கோவையில் எடப்பாடி பழனிசாமி நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியை, முக்கிய தொழில் அமைப்புகள் புறக்கணித்தன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அனைத்து வகை வணிகர் சங்கங்கள், சாலையோர வியாபாரிகள், தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன், தனியார் சிபிஎஸ்இ பள்ளி உரிமையாளர்கள் சங்கம், விசைத்தறி உரிமையாளர் சங்கம், நூற்பாலைகள் சங்கத்தினர், பவுண்டரி அசோசியேஷன்ஸ், ஆட்டோ வேன் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கம், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார்.
இந்த கலந்துரை யாடலில் பெரும்பாலான தொழில் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வணிக வர்த்தக அமைப்புகள் பங்கேற்கவில்லை. கொடிசியா, கோ-இந்தியா, சிட்கோ பகுதி தொழில் அமைப்புகள், பவுண்டரி, பம்பு, கிரைண்டர் தொழில் தொடர்பான முக்கிய அமைப்புகள், கிரில், இரும்பு தொழில் சார்ந்த அமைப்புகள், பெரிய அளவிலான விவசாய அமைப்புகள், வணிகர் வர்த்தகர் சங்கங்கள் என 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட சங்கத்தினர் எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற சில தொழில் அமைப்பினர், ‘‘நீங்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையே...’’ என ஆதங்கத்துடன் எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘இப்போது எங்களிடம் பவர் எதுவுமில்லை. ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம்’’ என்றார்.
முன்னதாக கூட்டத்தில், சங்க நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
கோவையில் விமான நிலைய விரிவாக்க திட்டம் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. இப்போது ஒன்றிய அரசு துரிதமாக செயல்பட்டு விமான நிலைய விரிவாக்கத்தை வேகமாக செயல்படுத்த நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஜிஎஸ்டி பற்றி பல்வேறு புகார் கூறியிருக்கிறீர்கள். இவற்றை எல்லாம் ஒன்றிய அமைச்சர் கவனத்திற்கு கொண்டுசென்று, வரியை குறைக்க நடவடிக்கை எடுப்போம். அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரியால், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பலர் சுட்டிக்காட்டி உள்ளீர்கள். இப்பிரச்னை பற்றி ஒன்றிய அரசிடம் பேசுவோம். இவ்வாறு எடப்பாடி பேசினார்.