மன்னார்குடி: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை திருவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு புறப்பட்டார். முன்னதாக மன்னார்குடி செல்லும் வழியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கூத்தாநல்லூர் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்த பகுதியில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கூத்தாநல்லூர் சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு பிரசாரம் மேற்கொள்ளாமல் கட்சியினரின் வரவேற்பை மட்டும் ஏற்றுக் கொண்டு புறப்பட்டு சென்றார். பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதை இஸ்லாமியர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் பாஜவுடனான கூட்டணியை விரும்பாத அதிமுக சிறுபான்மை பிரிவு பொறுப்பு வகித்த, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நேற்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதற்கிடையில், இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வரும் கூத்தாநல்லூர் பகுதியில் எடப்பாடி பிரசாரம் செய்தால், இஸ்லாமியர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணற வேண்டி வரும் என்று கருதி, கூத்தாநல்லூரை தவிர்த்து விட்டதாக, அதிமுக தொண்டர்கள், நிர்வாகள் தெரிவித்தனர்.
முதல்வர் ஸ்டாலின் குணமடைய எடப்பாடி பிரார்த்தனை
மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, திமுக தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிந்தேன். அவர் பூரண குணமடைய என் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறினார்.