மச்சாலா: தெற்கு ஈக்வடாரில் கும்பல் சண்டையால் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். ஈக்வடார் நாட்டில் குவாயாகுவிலுக்கு தெற்கே உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஒரு சிறைச்சாலை உள்ளது. அதில் அடைக்கப்பட்ட கைதிகள் நேற்று முன்தினம் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். அப்போது அதை தடுக்க சென்ற காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த மோதலில் கைதிகளும் கொல்லப்பட்டனர். மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர். இதனை காவல்துறைத் தலைவர் வில்லியம் காலே உறுதிப்படுத்தினார்.
கைதிகள் உள்ளே இருந்து கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர், குண்டுகள், கையெறி குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், சில கைதிகள் தப்பினர். இதுவரை 13 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாரிகள் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற முடிந்தது என்று காலே கூறினார்.
ஈகுவேடாரில் லாஸ் கொனரோஸ் மற்றும் லாஸ் லோபோஸ் ஆகிய இரு பெரும் போதை பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கம். அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சிறைகளில் அடிக்கடி மோதி கொள்வார்கள். இந்நிலையில், அவர்கள் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். சமீபத்திய ஆண்டுகளில் சிறைக் கலவரங்களால் ஈக்வடார் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கைதிகள் கொல்லப்பட்டனர். 2021ம் ஆண்டு சிறையில் நடந்த மோதலில், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் பலியானார்கள். 2021ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து இதுவரை 500 கைதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு, எரிக்கப்பட்ட கொடூர சம்பவங்களும் நடந்துள்ளன.