சென்னை: 11.19% பொருளாதார வளர்ச்சியே திராவிட மாடலுக்கு சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டுலயே டபுள் டிஜிட் வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுனு சொல்றீங்களே, ஏன் அதுக்கு அவ்வளவு IMPORTANCE கொடுக்குறீங்க? என கம்பைநல்லூரை சேந்த ரேவதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பதிலளித்து வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்; பல பிரச்சனைகளைக் கடந்து 11.19% பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை திராவிட மாடல் ஆட்சி 4 ஆண்டுகளில் செய்துள்ளது
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கர்நாடகம், மராட்டியம் போன்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சியை பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தை விட இரு மடங்கு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம். 4 ஆண்டுகளில் சராசரியாக 8.9% பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம். அதிமுக ஆட்சியில் சராசரி பொருளாதார வளர்ச்சி 2011-16ம் ஆண்டில் 6.7%ஆக இருந்தது. 2016-21ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.2%ஆக மேலும் வீழ்ந்தது. 11.19% பொருளாதார வளர்ச்சி, திராவிட மாடல் அரசு எந்த அளவுக்கு நிர்வாகத் திறனுடன் ஆட்சி செய்கிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.
கல்வி, மருத்துவத் தரம், உள்கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு என அனைத்தையும் எடுத்துக் காட்டுவதுதான் பொருளாதார வளர்ச்சி. எங்களின் சாதனையை நாங்களே முறியடிப்போம். ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் 3ம் இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு தமிழ்நாடு முன்னேறி உள்ளது. அதிமுக ஆட்சியில் 26 பில்லியன் டாலர்களாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சியை திமுக ஆட்சியில் 52 பில்லியன் டாலர்களாக உயர்த்தி உள்ளோம் என்று கூறினார்.