சென்னை: தொலைநோக்குத் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், சிவசங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு; நெருக்கடியில் போர்க்கால அடிப்படையில் திராவிடமாடல் அரசு செயல்பட்டது. ஒன்றிய அரசின் பங்களிப்பின்றி தமிழ்நாடு அரசு இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டது. காலத்தில் பெரும் இயற்கை சீற்றத்தை சந்தித்துள்ளது. நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்தை எட்டி சாதனை படைத்துள்ளோம். அதிமுக ஆட்சியில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி .07% இருந்த நிலையில் திமுக ஆட்சியில் 11.19% வளர்ச்சி அடைந்தது.
ஒரு லட்சம் பேருக்கு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 10.28 லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது; 32 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 16 நியோ டைடல் பார்க் உருவாக்கப்பட்டுள்ளது. 45ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் 70,400 கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 89 புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சொல்லாத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை 9.2சதவீதம் அதிகரித்துள்ளது.
காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 3700 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன; 2200 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ரூ.6.158 கோடியில் வடசென்னையில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.