Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேய்ச்சல் பொருளாதாரம் மிகவும் அவசியம்!

வரலாற்றுக் காலத்துக்கும் அதற்கு முன்பும் மக்கள் குழுக்களின் வாழ்வியலைப் பல்வேறு அறிஞர்கள் தொல்லியல் தரவுகளோடு ஓரளவு கணித்துள்ளனர். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் மேய்ச்சல் நிலக்குழுக்களின் பண்பாட்டு வாழ்வியலை தமிழின் பழம்பெரும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அதில் கால்நடைகள் மதிப்பு மிகுந்த செல்வங்களாகக் கருதப்பட்டன.இன்றைய தொழில்நுட்ப உலகில் மேய்ச்சல் தொழில் இழிவானதாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கல் மற்றும் அதிகரிக்கும் வருமானம் ஆகியவற்றால் கால்நடை பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. மொத்த இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதம் இருக்கும் கால்நடை வளர்ப்பின் பங்களிப்பில் 30 சதவீதம் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கால்நடைகளில் இருந்து வருகிறது.மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கால்நடைகளைக் கொண்டு விவசாய வயல்களில் கிடை அமைப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

முக்கியமாக காற்றில் உள்ள கார்பனைக் குறைக்கவும், பல்லுயிர்ப் பெருக்கம் அடையவும், மேய்ச்சல் உயிரினக் கழிவுகளில் இருந்து வேளாண் நிலம் வளமாகவும், நிலத்தில் கலக்கும் கழிவு நீரை சுத்தப்படுத்தவும் மாடு மற்றும் ஆட்டுக்கிடைகள் பெரும்பங்காற்றுகின்றன. அரசுக்கு பொருளாதார இழப்பின்றி நிலத்தை வளமாக மாற்ற மேய்ச்சல் தொழில்நுட்பம் எளிமையான வழியாக திகழ்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை 2026ம் ஆண்டை மேய்ச்சல் நிலம் மற்றும் மேய்ச்சல் மக்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது.கால்நடை மேய்ச்சலை தங்கள் வாழ்வியலாகக் கொண்ட மேய்ச்சல் சமூகத்தினர் மிகவும் பின்தங்கிய விளிம்பு நிலை மக்களாக உள்ளனர். அவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்பிற்காக அவர்களின் பிரச்சினைகளைக் கவனித்து செயல்படுத்த தனியாக நிறுவனமோ அல்லது முறையான திட்டங்களோ எதுவும் நடைமுறையில் இல்லை. இந்திய மக்கள் தொகையில் சுமார் 6 சதவீதத்தினர் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 50 லட்சம் மக்கள் மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைக் கூர்ந்து கவனித்து மேய்ச்சல் சமூகத்தினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக கால்நடை வளர்ப்போர் நலவாரியம் அமைத்து அவர்களின் மீது கவனம் செலுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தினால் கீழ்க்கண்ட பலன்களை அடையமுடியும்.

கால்நடை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கிராமப் பொருளாதாரத்தில் முன்னேற்றம், மண் வளத்தை மேம்படுத்துதல், பல்லுயிர்ப் பெருக்கம், சுற்றுச்சூழல் சேவைகளின் மேம்பாடு, சமூக நீதியை உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துதல், கால்நடைப் பொருட்கள் விநியோகத்தில் மற்ற மாநிலங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் உள்ளிட்ட ஏராளமான அனுகூலங்கள் இதன்மூலம் சாத்தியம் ஆகும்.

தொடர்புக்கு:

அடைக்கலம்

99424 56193.