சென்னை: அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்புள்ளது. அது சில மணி நேரங்கள் மட்டுமே புயலாக நீடித்து பின்னர் செயலிழந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக, தென் சீனக் கடல் பகுதியில் இருந்து தாய்லாந்து வழியாக மியான்மர் கடல் பகுதிக்கு ஒரு காற்றழுத்தம் 3ம் தேதி வந்து சேரும். இந்நிலையில் அரபிக் கடல் பகுதியில் இருந்து வங்கக் கடல் நோக்கி காற்று பயணிப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் வெப்பச் சலன மழை மாலை நேரங்களில் 2ம் தேதி வரை பெய்யும். 3ம் தேதி மாலை இரவில் ஆந்திர எல்லையோரப் பகுதி தொடங்கி மயிலாடுதுறை வரையும் மழை பெய்யும். மியான்மர் பகுதியில் இருந்து வரும் காற்று சுழற்சி ஒடிசா பகுதிக்கு சென்று திரும்பி மெல்ல நகர்ந்து 6ம் தேதி தமிழகத்துக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாநிலங்கள் வழியாக வரும் குளிர் காற்றை இது ஈர்க்கும். இதனால் மாலை, இரவில் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். இவ்வாறு 9ம் தேதி வரை வெப்பச்சலன மழை பெய்யும் நிலையில், 9ம் தேதியில் தமிழகம் நோக்கி ஒரு காற்று சுழற்சி வரும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி வரையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
  
  
  
   
