Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிகாலையில் மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம் நெல்லை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

*14 பயணிகள் காயம்

நெல்லை : நெல்லை அருகே நேற்று அதிகாலை மாடு குறுக்கே பாய்ந்ததால் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த 14 பயணிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருச்செந்தூரில் இருந்து நேற்று அதிகாலை நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ், கிருஷ்ணாபுரம் கடந்து வந்து கொண்டிருந்தது.

கொங்கராயக்குறிச்சியை சேர்ந்த வடிவேல் என்பவர் பஸ்சை ஓட்டிவந்தார். ஆச்சிமடத்திற்கும், ஆரோக்கியநாதபுரத்திற்கும் இடையே பஸ் வந்தபோது, சாலையில் திடீரென ஒரு மாடு குறுக்கே பாய்ந்தது. இதனால் ஓட்டுநர் மின்னல் வேகத்தில் பிரேக்கை அழுத்தியதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.

பள்ளத்தில் இருந்து மீண்டும் சாலைக்கு மேலே ஏற ஓட்டுநர் முயன்றபோது, பேருந்து ஆக்சில் கட்டானது. இதனால் பஸ் இடதுபுறமாக சாய்ந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. அதிகாலை 4 மணி என்பதால் பஸ்சில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் என்ன நடந்தது என்பது தெரியாமல் கத்த தொடங்கினர்.

பஸ் கவிழ்ந்ததில், பயணிகள் ஏறும் மற்றும் இறங்கும் வழி மண்ணில் புதைந்து போனதால், உள்ளே சிக்கியிருந்த பயணிகளால் வெளியே வர முடியவில்லை. அப்போது ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சர்ச் திருவிழா நடந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் வேகமாக ஓடிவந்து பஸ்சில் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பஸ்சில் உள்ள பயணிகளை காப்பாற்ற அவர்கள், பஸ் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்துப் பயணிகளையும் மீட்டனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும், பெருமாள்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, விபத்தில் காயமடைந்த அரசு பஸ் டிரைவர் வடிவேல், பயணிகள் ஜாஸ்மின், சீனிவாசன், அருணாசலம், அய்யப்பன், ரகுபதி, கந்தசாமி, அருண், மகாராஜன், காசிம் உள்ளிட்ட 14 பேரை மீட்டு பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தால் பாளை- திருச்செந்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதர பழசான மீட்பு வாகனம்

நெல்லை மாநகர பகுதிக்குள் அரசு பஸ்கள் விபத்தில் சிக்கி கொண்டால், அதற்காக அழைக்கப்படும் மீட்பு வாகனம் அதர பழசாக காட்சியளிக்கிறது. விபத்து நடந்த இடத்திற்கு தாமதமாக வருவதோடு, மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவிற்கு அதன் உதிரி பாகங்கள் படுமோசமாக காட்சியளிக்கின்றன. மீட்பு பணிக்கான உபகரணங்களும் இன்றி போக்குவரத்து கழக ஊழியர்கள் திண்டாடுகின்றனர்.