காதலி / மனைவி இருவரும் அணியும் உடைகள் குறித்த பெயர்கள், அதன் டிசைன்கள் குறித்த விபரங்கள் எதுவுமே தெரியவில்லை. இதில் பாட்டம் வேர்களில் மட்டும் இத்தனை வெரைட்டிகளா என ஆச்சர்யமா. அட ஆடைகளை விடுங்கள் காதில் மாட்டும் கம்மலிலேயே அத்தனை ரகங்கள், டிசைன்கள் உள்ளன. பொதுவாக கம்மல், தோடு, அதிக பட்சம் ஜிமிக்கி தெரியும். ஆனால் ஒவ்வொரு வகையும் ஒரு ரகம், அத்தனைக்கும் தனித் தனி பெயர்கள் உண்டு . உலகிலேயே இந்தியப் பெண்களின் நகைக் கலாச்சாரம் தனி அழகு கொண்டது. அவற்றின் பெயரும் அப்படித்தான்.
1. ஸ்டட்/ குண்டுமணி தோடு (Stud Earrings)
வடிவம்: சிறிய கல், வைரம் அல்லது முத்து காதில் நெருக்கமாக பொருத்தப்படும். இவற்றில் எவ்வித தொங்கல்களும் இருக்காது. காதுக்கு வெளியே இல்லாமல் இருக்கும் தோடுகள் இவை. காதில் பொட்டு வைத்தது போல் இருக்கும். பெரும்பாலும் பள்ளி, கல்லூரி பெண்கள் காதில் இழுக்காமல் இருக்க அணிவர். பயன்பாடு: தினசரி அணிவதற்கான எளிமையான நகை. பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டில், அணியப்படும்.
2. வட்டல்/ வளையம்/ ஹூப் காதணி (Hoop Earrings)
வடிவம்: முழு வட்டமாக காதில் சுழன்று இணையும் வடிவம். “வட்டல் காதணி”. பழங்காலத்தில் தங்க வளையம் பெண் குழந்தைகளுக்குப் போடுவதுண்டு. “சிறு வட்டம் / பெரிய வட்டம்” என்று அளவின்படி வேறுபடும். முகத்தை நீளமாகக் காட்டும்; முகவடிவத்துக்கு ஏற்றது. பல நூறு வருடங்களாக மாடர்ன் ஃபேஷன் யுகத்தின் அடையாளமாக இருக்கும் காதணி இதுதான். பயன்பாடு: இளம் பெண்களிடம் கேஷுவல் ஃபேஷனில் பிரபலமானது. யார் அணிந்தாலும் சட்டென டிரெண்டிங் கேர்ள் லுக் கொடுக்கும்.
3. ஜிமிக்கி/ஜும்கா காதணி (Jhumka / Jhumki)
வடிவம்: மணியாரக் கோல் வடிவில் கீழே குலுங்கும் பெல் வடிவ டிசைன். இந்தியப் பெண்கள் அடையாளமாக திகழும் ஒரு பாரம்பரியக் காதணி. “மணிகுண்டல்”, “குலுக்கல் காதணி”, “குண்டலம்” என பலவாறு அழைக்கப்படும் சங்கத்தமிழ் புகழ் காதணி டிசைன் இது. பயன்பாடு: திருமணம், வரவேற்பு, கோவில் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கும்.
4. தொங்கல்/ தொங்கட்டான்/ டிராப்ஸ் காதணி (Drop Earrings)
வடிவம்: காதில் இருந்து பல்வேறு டிசைன்களில் தொங்கும் விதமாக அணியப்படும் காதணி. “துளி காதணி”,நீர்த்துளி வடிவம்.“முத்துத் தொங்கல்” என பல வகைகள் இதில் உள் டிசைன்களாக உண்டு.
பயன்பாடு: சிறிய விழாக்கள், பார்டி, நிகழ்ச்சிகளுக்கு அழகான தேர்வு. முகத்திற்கு மென்மையான தோற்றம் தரும்.
5. தொங்கல்/ டேங்லர் காதணி (Dangler Earrings)
வடிவம்: நீளமான சங்கிலி அல்லது கல் வடிவம் காதின் கீழே தொங்கும். இவை டிராப்ஸ் காதணிகளை விடவும் பெரிய அளவில் கிராண்டான காதணிகளாக இருக்கும். சங்கிலி அல்லது சிறு முத்துகள் இணைந்த வடிவமாக இருக்கு. “அசைவுக் காதணி” எனவும் அழைக்கப்படும்.
பயன்பாடு: பாஷன் ஷோ, ஈவ்னிங் பார்டி, ரிசப்ஷன். கிராண்டான உடைகள், திருமண வரவேற்பு , என அணியும் போது நல்ல தோற்றம் கொடுக்கும்.
6. சந்த்பலி/சந்திர குண்டலம் காதணி (Chandbali Earrings)
வடிவம்: அரை சந்திரன் போல வளைந்த வடிவம், மேலே குண்டன் கற்களுடன்.எப்படி சந்த்பலி விளக்குகள் பல வரிசைகளுடன் தொங்குகின்றனவோ அதே பாணியில் தொங்கும் காதணிகள். டேங்லர் காதணிகளை விடவும் பெரிதாக, இன்னும் கிராண்டாக வடிவமைக்கப்படும் காதணிகள். பழமையான சங்ககாலப் பெண்களும் இதை அணிந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன.
பயன்பாடு: பாரம்பரிய உடைகள், திருமண நிகழ்ச்சிகள், பெரிய விழாக்கள், இவற்றில் அணிவதுண்டு. முகத்தில் பூரண வடிவத்தையும் பிரமாண்டமான அழகையும் தரும்.
7. காதைச்சுற்றி/இயர் கஃப் காதணி (Ear Cuff)
வடிவம்: காதின் பக்கவாட்டில் பிடித்துக் கொள்ளும் வடிவம், காதில் துளை இல்லாமலுமே அணியலாம். இவை காதுகளை மொத்தமாக மறைத்து வைப்பது போல் கூட அணியப்படுவதுண்டு. முழு காதுகளையும் அலங்கரிக்கும் காதணிகள் இவை.
பயன்பாடு: நவீன ஃபேஷனில் (fusion style) இளம் தலைமுறை பெண்கள் விரும்பும் ஸ்டேட்மென்ட் நகை. மேலும் இவை காதின் துளைகளில் மட்டுமின்றி காது மடல் முழுவதும் கூட அணியப்படும். தனித்துவமான ஈர்ப்பைக் (Unique Attention) கொடுக்க அணியப்படும் காதணி.
8. நூல் காதணி (Threader Earrings)
வடிவம்: மென்மையான சங்கிலி போல காதில் உட்புகுந்து செல்லும் இரு பக்கமும் தொங்கும் படியான காதணி. புதிய வடிவங்களில் “நூல் காதணி”, “மெல்லிய சங்கிலி காதணி” என அழைக்கப்படுகிறது.
பயன்பாடு: மினிமலிஸ்ட் ஃபேஷனுக்குப் பொருந்தும். மென்மை, நவீனத்தன்மை கொண்ட வடிவம். பெரும்பாலும் சங்கிலிகள் கண்களுக்கே தெரியாமல் , அது முடியும் கற்கள், பாசிகள் மட்டுமே புலப்படும் வகை கொரியன் காதணிகள் இவை.
9. குஞ்சம்/ டஸ்ஸெல் காதணி (Tassel Earrings)
வடிவம்: சில்க், காட்டன் அல்லது தங்க நூல்கள் கொண்டு உருவாக்கி தொங்கும் வடிவம். “தாழ் காதணி”, “நூல் தொங்கல்” எனப்படும் இவை கைகளால்
உருவாக்கப்படும் காதணிகள்.
பயன்பாடு: கைத்தறி உடைகள், போஹோ (Boho)/ ஜிப்ஸி ஸ்டைலுக்கு ஏற்றது. குறிப்பாக டிராவல் செய்யும் பெண்கள் சாய்ஸ் நகைகள்.
10. ஹக்கி/கவ்விக் காதணிகள் (Huggie Earrings)
வடிவம்: காது மடலைச் சுற்றி நெருக்கமாக அணியும் சிறிய ஹூப். “காது கட்டு”, “சிறு வளையம்” என்று அழைக்கப்படும் காதணிகள். குழந்தைகள் அணியும் பாரம்பரிய வடிவ நகைகள். ‘‘நானும் ரவுடி தான்’’ படத்தில் நயன்தாரா நிறைய அணிந்திருப்பார். இவை காதின் கீழ், பக்கவாட்டில், அல்லது மேல் பகுதி என அப்படியே கவ்விப் பிடித்திருப்பது போல் அணியப்படும் காதணிகள்.
பயன்பாடு: தினசரி, எளிமையான நகை. பொதுவாக டாம் கேர்ள் பெண்கள் இந்த காதணிகளுக்கு முக்கிய இடம் கொடுப்பது.
இவற்றில் தமிழ் பாரம்பரிய காதணி வடிவங்கள் தனி ரகமாக இன்றும் மார்க்கெட்டில் தனி அந்தஸ்த்துடன் உள்ளன.மாட்டல்: ஜும்கா அல்லது பெரிய காதணிகளை முடியுடன் இணைக்கும் மேல்நகை (இவை மூக்கு வரை கூட வட இந்தியாவில் சங்கிலி போல அணியப்படும்).
பட்டகம் : மயில், குயில், தாமரை வடிவ பொறிக்கப்பட்ட காதணி.
கோணகுண்டல் : முக்கோண வடிவ குண்டலக் காதணி, பழைய மதுரை மன்னர் காலம் வரை இருந்தது.
காதணிக் கோப்பி : தங்கத்தில் குட்டிக் குட்டி மணி வடிவங்களுடன் அமைந்தது.
தண்டட்டி& பாம்படம்: நம் தமிழ் பாரம் பரிய காதணிகள். பழங்காலத்தில் இந்தத் தோடு போட்டுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு தனி அந்தஸ்த்து உண்டு.
காதணித் தாழி: பெண் குழந்தைகளுக்கு போடப்படும் சிறிய முத்துத் தொங்கல்.
கோதுமை மணி : கோதுமை மணிகள் இரண்டு மேலும் கீழுமாக சங்கிலியில் தொங்குவது போல் அணியப்படும் பழங்கால பிரபல காதணி.
- ஷாலினி நியூட்டன்


