Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கழுகுமலை குடைவரை கோயில்

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி வட்டத்தில் கழுகுமலை என்ற ஊரில் உள்ளது வெட்டுவான் கோயில். கழுகுமலை ஊரிலிருந்து வடக்காகச் செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மலையில் கிழக்குப் பக்கம் வெட்டுவான் கோயில் குடைவரைக் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமண தீர்த்தங்கரர்கள் உருவங்களும் உள்ளன.‘அருக சமயக்கோட்டை அழித்த வெண்கனல்’என்று வள்ளலாரால் புகழப்பெற்ற நின்றசீர் நெடுமாறன் காலத்தில் சமணர்களை இவ்வூரில் கழுவேற்றிய காரணத்தினால் இவ்வூர் கழுமலை என்று பெயர் பெற்று பின்னர் கழுகுமலை என்று மாறிற்று என்பர்.

கழுகுமலையிலுள்ள வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப் போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாறையில் 25 அடி ஆழம் சதுரமாகத் தோண்டி அதன் நடுப்பகுதியைக் கோயிலாகச் செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக் கற்கோயிலாகும். இதன் வேலை முற்றுப்பெறவில்லை.

விமானத்தின் வேலை மட்டும் முடிவுற்றுள்ளது. இதில் கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. இதைத் தோற்றுவித்தவன் பாண்டியன் மாறஞ்சடையன். இதன் காலம் கி.பி 8ஆம் நூற்றாண்டு. இது மாமல்லபுரத்தின் ஐந்து ரதங்களின் வகையைச் சார்ந்தது. இதில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. வெட்டுவான் கோயிலிலுள்ள உமாமகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகிய தெய்வங்களின் சிற்ப வடிவங்கள் புகழ்பெற்றவை. இதில் மத்தளம் கொட்டும் தட்சிணாமூர்த்தி ஓர் அரிய சிற்பப்படைப்பாகும்.

கோயிலின் விமானத்தைத் தாங்கும் பூதகணங்களும் மாறுபட்ட சிற்ப நுணுக்கம் வாய்ந்தவை. விமானத்தின் மேற்குத் திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்திசிலைகள் இடம் பெற்றுள்ளன.இவற்றிற்குக் கீழ் யாழி வரிசையும், கபோதகமும் அமைந்துள்ளன. கபோதகம் என்பது கருவறைச் சுவரின் வெளிப்பகுதியில் மழைநீரானது படாமலிருப்பதற்காக அமைக்கப்படுவதாகும். விமானத்தின் ஓரப்பகுதி, கந்தர்வர்களின் தலையுடன் கூடிய கூடுகளும் அழகுசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கலையழகு வாய்ந்த சிற்பங்களைக்கொண்டு விளங்குவதால் இவற்றைத் தென்னகத்தின் எல்லோரா என்று அழைப்பர்.

சமணச்சிற்பங்கள் சமணர்களின் முக்கியப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்தில் உள்ள மலையின் சரிவில் சமணத் தீர்த்தர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோர்களின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிலைகளின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்ட எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. ‘எனாதி’, ‘காவிதி’ போன்ற சிறப்புப் பெயர் பெற்றவர்களும் இங்கு சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.