Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒவ்வொரு கிராமத்துக்கும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விநியோகம்: ரூ.100 கோடி ஒதுக்கிய டிடிவி தேனியில் பணமழை; கிராம தலைவர்களுக்கு ‘தனி’ கவனிப்பு

சென்னை: தேனி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு ரூ.100 கோடியை டிடிவி.தினகரன் பதுக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்மூலம் கிராமத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்கி வருகிறார். அதிமுக நிர்வாகிகளுக்கு தனியாகவும் பணத்தை வழங்கி வளைத்துப் போடுகிறார். அதிமுகவில் செல்வாக்காகவும், கட்சியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்திருந்த டிடிவி. தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவர், ஜெயலலிதா இருந்தபோதும் செல்வாக்காக இருந்தார். பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்தும், சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவுடனும் போட்டியிட்டார். அதில் படுதோல்வியை சந்தித்தார். இந்நிலையில்தான் அதிமுக, பாஜ கூட்டணி உடைந்தது. அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என்பதுபோல காத்திருந்த டிடிவி.தினகரன், பாஜ கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்றார். அதாவது நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி இல்லாமல் பாஜ தவிப்பதுபோலவும், 40 சீட் வைத்துள்ள டிடிவி.தினகரன் வலிய சென்று எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தால் பாஜ ஆட்சி தப்பித்து விடும் நிலை இருப்பதுபோல நினைத்துக் கொண்டு, நிபந்தனையற்ற ஆதரவு என்றார்.

ஆனால் அவரது அறிவிப்புக்கு பின்னால் பெரிய காரணங்கள் உண்டு. அவர் மீது வருமான வரித்துறையிலும், அமலாக்கத்துறையிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அதோடு, கட்சியை கைப்பற்ற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக சிபிஐயும் அவரை கைது செய்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது. சிபிஐ, இடி, ஐடி ஆகிய 3 துறைகளில் உள்ள வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பாஜவுடன் கூட்டணி என்றார். அதோடு தனக்கு சீட் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறேன். ஏன் ஒரு சீட் கொடுத்தால் கூட போதும் என்று பாஜ தலைவர்களிடம் பேசியதை, வெளியிலும் வந்து பெருமையாக சொல்லி புழங்காகிதம் அடைந்தார்.

அதோடு ஊழலுக்கு எதிராக போருக்கு தயாராகிவிட்டேன் என்று புறப்பட்ட அண்ணாமலை, நேரடியாக பல வழக்குகளில் சிக்கிய டிடிவியை அழைத்துக் கொண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொதுக்கூட்டத்துக்கு அழைத்துச் சென்று மோடிக்கே அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கை குலுக்கிய மோடி, அதன்பின்னர் தேனி மாவட்டம் இருக்கும் பக்கம் கூட பிரசாரத்துக்கு செல்லவில்லை. அமித்ஷாவும் அதேபோல தேனி பக்கம் செல்வதை தவிர்த்து வருகிறார். ஆனால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை மோடி, அமித்ஷாவை அழைத்து வரவேண்டும் என்று அண்ணாமலையிடம் வலியுறுத்தி வருகிறார்.

அதோடு அண்ணாமலையின் கோவை தொகுதிக்கும் டிடிவி.தினகரன் தேர்தல் செலவின் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தேனி தொகுதியில் தனது சமுதாய மக்கள் அதிகம் இருப்பதால், அங்கு ரூ.100 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டு பெருமளவில் பணத்தை பல்வேறு இடங்களிலும், சமுதாய தலைவர்களின் வீடுகளிலும் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் பிரசாரம் செய்யச் செல்லும் டிடிவி.தினகரன், முன்னதாக சிலரை அனுப்பி கிராமத்தில் எவ்வளவு ஓட்டு உள்ளது என்பதை கணக்கிட்ட பிறகுதான் செல்கிறார்.

பின்னர் கிராமத்தில் பிரசாரம் முடிந்ததும் கிராமத்தில் உள்ள மூத்த தலைவரை அணுகி, ஓட்டுக்கு ஏற்றார்போல ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கணக்கிட்டு, கிராமத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இது கிராமத்தில் உள்ள கோயில் கட்ட, சமூக நலக்கூடம் கட்டுவதற்கு என்று வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு அந்த கிராமத் தலைவருக்கு என்று தனியாக கவனிப்பும் நடக்கிறதாம். அதோடு தேனியில் உள்ள பல நகரங்களில் டிடிவி.தினகரன் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள ஓட்டல்களை புக் செய்துள்ளார்களாம்.

அந்த ஓட்டலில் டிடிவி.தினகரன் பெயரைச் சொல்லிவிட்டு யார் வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு பணம் கட்ட வேண்டியதில்லையாம். இதுவே ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் செலவாகிறதாம். அதை தவிர அதிமுகவில் உள்ள ஓட்டுகளை இழுக்கவும் தனியாக திட்டம் வைத்து செயல்படுகிறாராம். தேனியில் அதிமுக வேட்பாளராக நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் தனது சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை போனில் அழைத்து, அவர்களுக்காக ஒரு கணிசமான தொகையை கொடுத்து அனுப்பி, அவர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி விடுகிறாராம். இதனால் அங்கு தற்போது அதிமுகவினர் வேலையே செய்வதில்லையாம்.

இதேநிலை ஏற்பட்டால், அதிமுகவுக்கு 3வது இடமோ ஏன் 4வது இடமோதான் கிடைக்கும். கண்டிப்பாக டெபாசிட் கிடைக்காது என்கிறார்களாம். எடப்பாடி பழனிசாமி நேரடியாக தலையிட்டு அதிமுகவினரை வேலை வாங்கினால் தவிர அதிமுக 3வது அல்லது 4வது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும் என்கின்றனர். மாற்று கட்சியினரை வளைக்கவும் பெரிய அளவில் பணத்தை செலவிடுகிறாராம். இதனால் தேனி தொகுதிக்கு மட்டும் தேர்தல் செலவுக்காக ரூ.100 கோடியை ஒதுக்கி, களத்தில் இறக்கியுள்ளாராம். ஆனால் தேனி தொகுதிக்கு தேர்தல் அதிகாரிகளோ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளே எந்தவித உளவு தகவல்களையும் சேகரிப்பதில்லையாம். இதனால் பணம் விநியோகம் ஜரூராக நடக்கிறது என்கின்றனர் தேனி பொதுமக்கள்.

* தேனி கடைகளில் சில்லரை தட்டுப்பாடு

தேனியில் அமமுகவினர் பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகமாக உள்ளதாம். அங்கு சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். எந்த கடைக்கு சென்றாலும் கட்சிக்காரர்களாக இருந்தாலும், பொதுமக்களாக இருந்தாலும் 500 ரூபாய் நோட்டை நீட்டுகிறார்களாம். டீ கடையில் டீ, வடை, பஜ்ஜிக்கு கூட ரூ.500 தானாம். இதனால் கடைக்காரர்கள் பக்கத்து தொகுதிகளில் இருந்து தினமும் பல லட்சம் ரூபாயை சில்லரையாக வாங்கி வைத்து சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்கிறார்களாம்.