சென்னை: எடப்பாடி பழனிசாமி மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் தேடி வருகின்றனர். சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாலம் அருகே உள்ள இந்திய கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு நேற்று முன்தினம் இ-மெயில் ஒன்று வந்தது. அதில் கடலோர பாதுகாப்பு குழும அலுவலகம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசித்து வரும் பசுமை வழிசாலையில் உள்ள வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகள் சென்னை பெருநகர காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் இந்திய கடலோர பாதுகாப்பு குழும கிழக்கு மண்டல அலுவலகம் மற்றும் பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை.
அதன் பிறகு இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து கோட்டை போலீசார் மற்றும் அபிராமபுரம் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மர்ம நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.