Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை மீட்டெடுக்க வேண்டும்

*அரசுக்கு தொழிலாளர்கள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே டி.புத்தூர், பாழ்வாய்க்கால், சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

மண்பாண்டம் செய்வதை பல தலைமுறைகளாக பாரம்பரியமாக செய்து வரும் இவர்கள் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானை, விறகு அடுப்பு, சட்டி என பல வடிவங்களில் மண்பாண்ட பொருட்களை கலை நயத்தோடு செய்து வருகின்றனர்.

பாரம்பரிய மண்பாண்ட தொழில் வருங்காலத்தில் அழிந்து விடும் நிலையில் உள்ளது. தற்போது சிலர் மட்டுமே இத்தொழிலை செய்து வருகின்றனர். மண்பாண்டங்களை பொங்கல் பண்டிகையின்போது நியாயவிலை கடைகளில் மற்ற பொருட்களோடு மக்களுக்கு கிடைப்பதற்கு அரசு நேரிடையாக மண்பாண்ட பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

மண்பாண்டங்களின் மகத்துவம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆபத்தின் விளிம்பில் உள்ள இத்தொழிலுக்கு எவ்விதமான நிபந்தனைகள் இன்றி மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்‌. மாதாந்திர வாழ்வாதார உதவி தொகையாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ. 5000 வழங்க வேண்டும்.

மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்ய அருகிலுள்ள நகரங்களில் அரசு கடை அமைத்து தர வேண்டும். மண்பாண்டங்களை ஏற்றுமதி செய்வதற்கு தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் வைத்துள்ளனர்.

பாரம்பரிய மண்பாண்ட கலைஞர்களை வளர்வதற்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அதன்படி மண்பாண்ட தொழிலில் உள்ள நடைமுறை சிக்கலை போக்கி அவர்களிடம் உள்ள கலைத்திறனை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும்.

சுமார் ஒரு கிலோ களிமண்ணில் ஓராயிரம் வடிவங்களை சிற்பியாகி கலை நயமிக்க பொருட்களை செதுக்கும் திறன் பெற்றவர்கள் மண்பாண்ட தொழிலாளர்கள். தற்போது நம்மிடையே மாறிவிட்ட கலாச்சார மாறுபாட்டில் மண்பாண்டங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறோம். அதனால் நாம் பல்வேறு தொல்லைகளையும் அனுபவித்து வருகிறோம்.

எனவே ஒவ்வொருவரும் சற்று சிந்தித்து மண்பாண்ட தொழிலை ஊக்குவித்து வளர்ச்சி அடைய வைக்க வேண்டும். அதனால் அகல் விளக்கு, மண்பானை, பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு கைவினை தொழில்களை செய்து வரும் கலைஞர்களையும், அவர்கள் குடும்பத்தையும் அரசு அரவணைத்து பாதுகாத்து அவர்களை மேன்மேலும் வளர்ச்சியடைய வைக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.