கொல்கத்தா: ஆசியவாவின் பழமையான துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 134வது தொடர் மேற்குவங்கம், மேகலாயா, அசாம் உள்ளிட்ட மாநில நகரங்களில் நடந்து வருகிறது. இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டலம் நடத்தும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் நார்த் ஈஸ்ட் யுனைடட், 17முறை சாம்பியன் மோகன் பகான் எஸ்ஜி, இந்திய ராணுவம், இந்திய கடற்படை என இந்திய அணிகள் மட்டுமின்றி மலேசியா ஆயுதப்படை, நேபாள ராணுவம் 24 அணிகள் பங்கேற்றன.
லீக் சுற்றில் இவை தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக களம் கண்டன. இந்நிலையில் லீக் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்கிழமை முடிந்தன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடித்த ஈஸ்ட் பெங்கால் எப்சி, மோகன்பகான் எஸ்ஜி, ஜாம்ஷெட்பூர் எப்சி, போடோலேண்ட் எப்சி, நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி, இந்திய கடற்படை எப்சி ஆகியவை நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
எஞ்சிய 2 இடங்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் 2வது இடம் பிடித்த அணிகளில் சிறந்த 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி டயமண்ட் ஹார்பார் எப்சி(பி பிரிவு) ஷில்லாங் லஜோங் எப்சி(இ பிரிவு) ஆகிய 2 அணிகள் காலிறுதியில் விளையாட உள்ளன. அதன்படி நாளை நடைபெற உள்ள முதல் காலிறுதியில் ஷில்லாங்-இந்திய கடற்படை, 2வது காலிறுதியில் போடோலேண்ட்-நார்த்ஈஸ்ட் யுனைடட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெற உள்ள 3வது காலிறுதியில் ஜாம்ஷெட்பூர்-டயமண்ட் ஹார்பர், 4வது காலிறுதியில் மோகன் பகான்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத இருக்கின்றன. இவற்றில் வெற்றிப் பெறும் அணிகள் ஆக.19, 20 தேதிகளில் நடக்கவுள்ள அரையிறுதியில் களம் காணும். இறுதி ஆட்டம் ஆக.23ம் தேதி நடைபெறும்.