கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடந்த துரந்த் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் எப்சி அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கொல்கத்தாவில் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் 134வது துரந்த் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது. அதில், நடப்பு சாம்பியன் நார்த் ஈஸ்ட் எப்சி அணியும், டைமண்ட் ஹார்பர் எப்சி அணியும் மோதின.
துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து கோல்களை போட்டனர். அந்த அணியின் அஷீர் அக்தர் 30வது நிமிடத்தில் முதல் கோல் போட்டார். அவரை தொடர்ந்து பார்திப் கோகோய் 45+1, தோய் சிங் 50, ஜெய்ரோ 81, ஆண்டி 85, அலாதின் அஜாரே 90+3வது நிமிடங்களில் கோல்களை அடித்து அசத்தினர்.
மாறாக, டைமண்ட் ஹார்பர் அணியின் ஜாபி ஜஸ்டின், 68வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே போட்டார். அதனால், 6-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணி இமாலய வெற்றியை பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. இந்த தொடரில், நார்த் ஈஸ்ட் அணியின் அலாதின் அஜாரே 8வது கோல் போட்டு சாதனை படைத்தார். அவருக்கு, கோல்டன் பால், கோல்டன் பூட் விருதுகள் வழங்கப்பட்டன.