திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகர் துல்கர் சல்மானின் 2 கார்களை சுங்கத் துறை பறிமுதல் செய்தது. பூடான் நாட்டு ராணுவம் தாங்கள் பயன்படுத்திய லேண்ட் க்ரூசர், லேண்ட் ரோவர், டாடா எஸ்யுவி, மகீந்திரா, டாடா டிரக்குகள் உள்பட 190க்கும் மேற்பட்ட வாகனங்களை சமீபத்தில் ஏலத்தில் விட்டது. இந்த வாகனங்களை ஒரு கும்பல் வாங்கி சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தி வந்து இமாச்சலபிரதேசத்தில் பதிவு செய்து 4 மடங்குக்கு மேல் விற்பனை செய்து வருவதாக மத்திய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த வாகனங்கள் பின்னர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட மாநிலங்களில் மறுபதிவு செய்து விற்பனை செய்யப்படும். ரூ.5 லட்சத்திற்கு வாங்கும் வாகனங்கள் ரூ.40 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுங்கத்துறை ரகசிய விசாரணை நடத்தி வந்தது. இதில் பிரபல மலையாள நடிகர்களான பிரித்விராஜ், துல்கர் சல்மான் மற்றும் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானோர் இது போன்ற வாகனங்களை வாங்கி இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இன்று காலை கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான இடங்களில் ஆபரேஷன் நும்கோர் என்ற பெயரில் சுங்கத்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர். கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடிகர்கள் பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகள் மற்றும் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள சில தொழிலதிபர்கள் வீடுகள் மற்றும் வாகன ஷோரூம்கள் உள்பட 30 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
துல்கர் சல்மானின் 2 கார்களை சுங்கத் துறை பறிமுதல் செய்தது. துல்கர் சல்மானின் இரு கார்கள் உள்பட 7 இடங்களில் மொத்தம் 11 கார்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தி வந்து விற்கப்பட்ட பூடான் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய கார்களை வாங்கிய புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.