தூத்துக்குடி: துபாயில் இருந்து பேரீச்சம்பழங்கள் மத்தியில் பதுக்கிவைத்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.75 கோடி சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாய் ஜபல் அலி துறைமுகத்தில் இருந்து இரு நாட்களுக்கு முன் 100க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்துள்ளது.
அதில் ஒரு கன்டெய்னரில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு `வெட் டேட்ஸ்’ எனப்படும் ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.சந்தேகத்தில் மத்திய புலனாய்வு வருவாய் பிரிவு அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் பாதி அளவுக்கு பேரீச்சம்பழம் பாக்கெட் பண்டல்கள் இருந்தன. அதற்கு பின்னால் சிகரெட் பெட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதில் 1,300 பெட்டிகளில் இருந்த 20 லட்சம் சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.75 கோடியாகும். மேலும் ரூ.55 லட்சம் மதிப்பிலான பேரீச்சம்பழம் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சிகரெட்டுகள் யாருக்காக கடத்தி கொண்டுவரப்பட்டன? என்று அதனை இறக்குமதி செய்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ரூ.7 கோடி விளையாட்டு பொம்மைகள் பறிமுதல்
சீன துறைமுகமான நிங்போவில் இருந்து தூத்துக்குடி வந்த கப்பலில் பெங்களூருவை சேர்ந்த நிறுவனத்திற்கு அடுத்தடுத்து 4 கன்டெய்னர்கள் வந்திருந்தன. அதிகாரிகள் சோதனையிட்டதில் அவற்றில் சட்டவிரோதமாக சீனாவில் இருந்து விளையாட்டு பொம்மைகள் மற்றும் ஷூக்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியாகும்.