Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் லண்டன் போன்ற வெளிநாடு பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்ட்டுக்கு வருவது தாமதம்: நீண்டநேரம் காத்திருப்பதால் பயணிகள் வாக்குவாதம்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிகாலை நேரங்களில், வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக துபாய், அபுதாபி, கத்தார், லண்டன் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்ட்டுக்கு வருவதற்கு தாமதம் ஆவதால், பயணிகள் நீண்ட நேரம் நேரம் காத்திருக்கின்றனர். பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி, பிசினஸ் கிளாஸ் உயர் வகுப்பு பயணிகளின் உடைமைகளும் தாமதம் ஆவதால், அந்த பயணிகள் வாக்குவாதங்களில் ஈடுபடும் சம்பவங்கள் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து நடக்கின்றன.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவு, அதிகாலைகளில் துபாய், அபுதாபி, கத்தார், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, பல விமானங்கள் வருகின்றன. அந்த விமானங்களில் வரும் பயணிகள், குடியுரிமைச் சோதனையை முடித்துவிட்டு, கன்வேயர் பெல்ட் பகுதிக்கு வந்து, தங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு, சுங்கச் சோதனை முடித்து வெளியில் செல்வதற்கு தயாராவது வழக்கம். அதேபோல் பயணிகள் கன்வேயர் பெல்ட் பகுதிக்கு வந்து உடைமையை எடுக்க காத்திருந்தால், நீண்ட நேரமாக பயணிகளின் உடைமைகள் வருவது கிடையாது.

அதோடு விமான பயணிகளில், பிசினஸ் கிளாசில் பல மடங்கு அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்து வரும் பயணிகளின் உடைமைகள், பயணிகள் கன்வேயர் பெல்ட் பகுதிக்கு வருவதற்கு முன்னதாகவே, கன்வேயர் பெல்ட்டுக்கு வந்து விட வேண்டும். பிசினஸ் கிளாஸ் பயணிகள் உடைமைகளுக்காக காத்திருக்காமல், உடனடியாக எடுத்துக் கொண்டு சுங்கச் சோதனை பிரிவு பகுதி வழியாக வெளியில் செல்வார்கள். ஆனால் சமீப காலமாக, விமானங்களில் எக்னாமி எனப்படும் சாதாரண வகுப்பு டிக்கெட் எடுத்து வரும் பயணிகளின் உடைமைகள், கன்வேயர் பெல்ட்டிற்கு வந்தால் கூட, பிசினஸ் கிளாஸ் பயணிகளின் உடைமைகள் வருவதற்கு தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.

இதனால் சமீப காலமாக, அதேபோல், விமான பயணிகளின் உடைமைகள் வருவதற்கு தாமதம் ஆவதால், பயணிகள் ஆத்திரமடைந்து விமான நிலைய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் பிசினஸ் கிளாஸ் பயணிகளின் உடைமைகள் தாமதம் ஆகுவது அதிக அளவில் நடப்பதால், அவர்கள் கடும் வாக்குவாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். பயணிகளின் உடைமைகள் தாமதம் ஆவது, குறிப்பாக துபாய், அபுதாபி, கத்தார், சார்ஜா, லண்டன் விமானங்களில் அதிக அளவு ஏற்படுகின்றன.

இதில் துபாய், அபுதாபி போன்ற விமானங்கள், அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு இணைப்பு விமானங்களாக உள்ளன. அதுபோல் கத்தார், லண்டனிலிருந்து வரும் விமானங்கள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமானங்களாக வருகின்றன. இந்த விமானங்களில் வருகின்ற பயணிகள், 10 மணியில் இருந்து, 15 மணி வரை தொடர்ந்து பயணம் செய்து, களைப்புடன் வருவார்கள். அவர்களுக்கு உடைமைகள் வராததால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுவது பெரும் பாதிப்பாக இருக்கிறது.

இதனால் பயணிகள் பலர் வெளிநாடுகளில் இருந்து இணைப்பு விமானங்களில் வரும் போது, நேரடியாக சென்னைக்கு வராமல், பெங்களூரு விமான நிலையம் வரத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் இந்திய அளவில், வெளிநாட்டு விமான பயணிகளை கையாளுவதில் இரண்டாம் இடத்தில் இருந்த சென்னை, தற்போது மூன்றாம் இடத்திற்கு பின் தங்கியதோடு மூன்றாம் இடத்தில் இருந்த பெங்களூரு, இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்ட்டிற்கு வருவதற்கு தாமதமாவதற்கு காரணம், அந்த உடைமைகளை விமானத்திலிருந்து இறக்கி, கன்வேயர் பெல்ட்டில் வருவதை கையாளும் கிரவுண்ட் ஸ்டாப் எனப்படும் தரைதளம் ஊழியர்கள் பலர், அனுபவம் இல்லாமல் பணிகளை மெதுவாக செய்வது, அதோடு பிசினஸ் கிளாஸ் பயணிகளின் உடைமைகளை, கன்வேயர் பெல்ட் முதலில் அனுப்பாமல், எக்னாமிக் கிளாஸ் பயணிகளின் உடைமைகளை முதலில் அனுப்புவது போன்ற குளறுபடிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த தரைதளம் பணிகளை செய்வதற்கு, தனியார் ஒப்பந்த நிறுவனம், தற்காலிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அந்த ஒப்பந்த நிறுவனம், முறையாக பணியாளர்கள் மூலம், பணிகளை நடக்கச் செய்தால், இந்த குறைபாடுகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

* உள்நாட்டு விமான பயணிகளும் அவதி

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வரும் உள்நாட்டு விமானங்களை விமான நிலைய கார்கோ பகுதியில் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றனர். பயணிகளை அங்கிருந்து, விமான நிறுவனங்களின் வாகனங்கள் மூலம், உள்நாட்டு முனையத்திற்கு அழைத்து வருகின்றனர். இதனால் விமானம், சென்னையில் வந்து தரையிறங்கி, சுமார் ஒரு மணி நேரம் கழித்தே, பயணிகள் விமான நிலையத்தில் வெளிப்பகுதிக்கு வர முடிகிறது. பயணிகள் வெளியில் வந்தால், அவர்கள் கால் டாக்ஸி, மற்றும் வாகனங்களில் ஏறுவதற்கு மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் உள்ள பிக்கப் பாய்ண்ட் செல்வதற்கு, பேட்டரி வாகனத்தை எதிர்பார்த்து, டெர்மினல் 1, வருகை பகுதிக்கு வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் போதுமான பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுவது கிடையாது. இதனால் சில பயணிகள் நடந்தே, மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு செல்கின்றனர். அங்கிருந்து இரண்டாவது தளத்தில் உள்ள பிக்கப் பாயிண்டிற்கு செல்வதற்கு, லிட்ப்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. லிப்ட்டுகள் அதிகம் இருந்தாலும், இரவு நேரங்களில் அவைகள் சரிவர இயங்காமல், ஓரிரு லிப்ட்டுகள் மட்டுமே இயங்குவதாக கூறப்படுகிறது.

இதேபோல் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சென்னையில் வந்து தரையிறங்கும் உள்நாட்டு விமான பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, சென்னை உள்நாட்டு விமான நிலைய பகுதியில் ஏரோப் பிரிட்ஜ் மற்றும் டாக்ஸி வே அமைக்கும் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் விமானங்கள் வந்து நிற்கக்கூடிய, ஃபே எனப்படும் விமானங்கள் வந்து நிற்கும் 8 தடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் விமானங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல், கார்கோ பகுதியில் கொண்டு போய் விமானங்கள் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் அந்தந்த விமான நிறுவன பேருந்துகள் மூலம் விமான டெர்மினல் அழைத்து வரப்படுகின்றனர்.

இதனால் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியில் வருவதற்கு, சிறிது கால தாமதம் ஏற்படுகிறது. ஏரோ பிரிட்ஜ், டாக்ஸி வே பணிகள் முடிந்ததும் வழக்கம்போல் விமானங்கள் டெர்மினல் அருகில் வந்து நிறுத்தப்படும். அதோடு பேட்டரி வாகனங்கள் அதிக அளவில் இரவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிப்ட்டுகளும் அதிகமாக உள்ளன. அனைத்து லிப்ட்டுகளும் இரவில் முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளின் லக்கேஜ்கள் வருவது தாமதம் ஏற்படுவது குறித்து, ஒப்பந்த நிறுவனங்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.